புதுடில்லி: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்துள்ள உத்தரவினை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
கடந்த 2016ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜன.,19 அன்று, ஒரு தீர்ப்பு அளித்தது.'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, அந்த நபரை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கொண்டு சென்றார். உயர்நீதிமன்ற கிளையில் இந்த தீர்ப்பானது, இடையூறு ஏற்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்ற கிளையானது, பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது எனக்கூறி குற்றவாளி விடுவிக்கப்பட்டதை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தெரிவித்தார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், உயரநீதிமன்ற கிளையின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE