புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் அமைதியாக நடத்திய டிராக்டர் பேரணியை, பாதையை மாற்றி செங்கோட்டை வரை நுழைந்து, சீக்கிய அமைப்பின் கொடி ஏற்றப்பட்டதற்கு, போராட்ட களத்தில் இருந்த தீப் சிங் என்ற நடிகரும், தாதாவாக இருந்து சமூக ஆர்வலராக மாறிய லகா சிதானா என்பவர்கள் மீது விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: விவசாயிகளின் டிராக்டர் பேரணியை செங்கோட்டை வரை கொண்டு சென்று, சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்ட சர்ச்சைக்கு, நடிகர் தீப் சித்துவும், தாதாவாக இருந்து தன்னார்வலராக மாறிய லகா சிதானாவுமே காரணம் என விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டும் செல்லாமல், மற்ற பகுதிகளிலும் டிராக்டரில் விவசாயிகள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்கவே, வன்முறை ஏற்பட்டது. ஒரு இடத்தில், தடுப்பு மீது டிராக்டர் மோதி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்த வன்முறையில் ஒரு கட்டமாக, போராட்டக்காரர்கள், செங்கோட்டை வரை சென்று, அங்கு சீக்கிய மதக்கொடியை ஏற்றினர். இதனை சித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பியதுடன், அதன் மூலம் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அங்கிருந்தே கோஷம் எழுப்பினர். ஆனால், அந்த இடத்தில் சிதானா காணப்படவில்லை.
திங்கட்கிழமை இரவு, சிங்கு எல்லையில் நடந்த கூட்டத்தில் இளைஞர்களை தவறாக வழிநடத்தியதாக சித்து மற்றும் சிதானா மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், அதனை அவர்கள் மறுத்துள்ளனர். இந்த வன்முறை காரணமாக, பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த சன்யுக்த் கிஷான் மோர்ச்சா அமைப்பு, பேரணியை உடனடியாக திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தது. வன்முறைக்கு காரணமானவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், சமூக விரோத சக்திகள் ஊடுருவி போராட்டத்தை திசைதிருப்பியதாக தெரிவித்தது.
அதேபோல், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு அமைப்பானது, தடுப்புகளை தகர்த்ததை வெளிப்படையாக ஒப்பு கொண்டது. ஆனால், செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகளுக்கு தாங்கள் காரணமில்லை என தெரிவித்தது.
யாருடைய திட்டம்
டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்த வழிகளில் செல்லாமல், மாற்று வழிகளில் சிலர் சென்றதாலேயே போராட்டம் வெடித்தது. டில்லியின் புறநகர் பகுதிகளில் மட்டும் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்த விவசாய சங்கத்தினர், டில்லியின் வெளிப்புறத்தில் உள்ள சுற்றுவட்ட பாதைகளில் பேரணி நடத்த விரும்பியதாக கூறினர்.

திங்கட்கிழமை இரவு பேரணி தொடர்பாக, சிங்கு எல்லையில் சன்யுக்த் கிஷான் மோர்ச்சா அமைப்பினர் நடத்திய ஆலோசனையில், பங்கேற்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள், டில்லியின் வெளியே உள்ள சாலையில் பேரணி செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். மேலும், சில இளைஞர்கள் மேடையில் ஏறி, மைக்ரோபோனை பிடுங்கி, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிட்டனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் என்பதை விவசாய சங்க தலைவர்கள் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், எந்த தலைவர்களும் மேடைக்கு வரவில்லை.
மாறாக, சிங்கு எல்லையில், தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வரும் லகா சிதானா மேடை ஏறி, சமாதானப்படுத்த முயன்றார். டில்லியின் வெளியே உள்ள சாலையில் பேரணி நடத்த அனுமதிப்போம் என தெரிவித்தனர். இருப்பினும், அதனை ஏற்காமல் இளைஞர்கள் தாங்களாகவே அறிவிப்புகளை வெளியிட்டனர். டிராக்டர்களில், விவசாய சங்கம் மற்றும் சீக்கிய அமைப்பின் கொடிகளை கட்ட வேண்டும் எனக்கூறினர். தீப் சித்தும் அந்த மேடையில் பேசினாலும், செங்கோட்டை செல்ல வேண்டும் என யாரும் பேசவில்லை.
சித்து மற்றும் சிதானா மீது குற்றச்சாட்டு
இந்த வன்முறைக்கு தாங்கள் காரணமில்லை என தெரிவித்துள்ள சில விவசாய சங்கத்தினர், ஆரம்பம் முதலே, விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையிலேயே சித்துவும், சிதானாவும் செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பிகேயு அமைப்பின் தலைவர் ஜோகிந்தர் சிங் கூறுகையில், தீப் சித்து மற்றும் லகா சிதானா ஆகியோர் எங்களது போராட்டத்தை சீர்குலைக்க முயன்றனர். வன்முறையை தூண்ட முயற்சித்த அவர்கள், போராட்டத்தை மாற்ற முயன்றனர். எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழியாகவே பேரணி நடத்தினோம். ஆனால், அதனை மாற்றிய இளைஞர்களுடன் நாங்கள் செல்லவில்லை. எங்களது ஆதரவாளர்களும் செல்லவில்லை. எங்களது உறுப்பினர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். சித்து மற்றும் சிதானாவின் திட்டங்கள், எதற்காக அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. போலீசார் ஏற்படுத்திய தடுப்புகளை மீறி, தனது ஆதரவாளர்களுடன் சித்து செங்கோட்டை வரை சென்றது ஆச்சர்யமளிக்கிறது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மற்றொரு அமைப்பின் தலைவர் கூறுகையில், சித்து ஆரம்பம் முதலே, பிரச்னை ஏற்படுத்தி வந்தார். திக்ரி எல்லையில் துவங்கிய பேரணியில் இருந்து நான் வந்தேன். ஆனால், செங்கோட்டையில் சித்து கொடி ஏற்றியது குறித்த செய்தி கேள்விப்பட்டேன். ஆரம்பம் முதலே, சித்து பிரச்னை ஏற்படுத்தி வருகிறார். எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழியாகவே சென்றோம் என தெரிவித்தார்.
இன்னும் சில தலைவர்கள், சித்து அரசின் ஏஜென்ட் போல் செயல்பட்டார். பல நாட்களாக, போராட்டக்காரர்களை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். அவருடன் சென்ற இளைஞர்கள், ரிங்ரோடு செல்வதாக தெரிவித்தனர். மாறாக அவர்களை செங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார் என தெரிவித்தார்.
இவ்வாறு சர்ச்சைகளுக்கு முக்கிய புள்ளியாக விளங்கும் சித்து, பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: பிரிவினையை ஏற்படுத்தும் அறிவிப்புகளை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது நடவடிக்கைகளை சேத விரோத நடவடிக்கையாக பார்க்கக்கூடாது. தேசிய கொடியை தொடாமல், எங்களது கொடியை மட்டும்தான் ஏற்றினோம். இது வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.
லகா சிதானா கூறுகையில், ஆலோசனை கூட்டத்தின் மேடையில் பேசுவதற்காக நான் செல்லவில்லை. நிலைமையை கட்டுப்படுத்தும்படி, விவசாய சங்க அமைப்பின் தலைவர் தான் என்னை மேடை ஏறும்படி கூறினார். பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் எதையும் தெரிவிக்க வேண்டாம் என்றார்.
யார் இந்த சித்து, சிதானா?
சீக்கிய பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த ஜர்னல்சிங் பிந்ரன்வாலேயின் தீவிர ஆதரவாளரான தீப் சிங், குருதாஸ்பூர் தொகுதி பா.ஜ., எம்.பி.,யான சன்னி தியோலுடன் , நெருங்கி பழகினார். தேர்தல் பிரசாரத்திலும் அவருடன் இணைந்து ஈடுபட்டார். ஆனால், கடந்த மாதம் முதல் தியோலுடன் இருந்த உறவை சித்து துண்டித்து கொண்டார். சன்னி தியோலும் இதனை உறுதி செய்து, சித்துவுடன் , தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எந்த உறவும் இல்லை எனக்கூறினார்.
கடந்த நவ.,மாதம், விவசாய சங்க போராட்டம் துவங்கிய போது, மேடையில் பேசுவதற்கு சித்து அனுமதிக்கப்படவில்லை. போராட்டத்தை திசை திருப்ப அவர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பேஸ்புக் மூலம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசி வந்தார். டிராக்டர் குறித்த ஆலோசனை கூட்டத்தின் போதும், பிந்ரன்வாலே குறித்து பேசிய போதும் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து இளைஞர்கள் பொறுமை காக்கும்படி கேட்டு கொண்டார். இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து சங்க தலைவர்களுடன் பேச அமைக்கப்பட்ட5 பேர் குழுவில் சித்துவும், சிதானாவும் அடங்குவார்கள்.
ஒரு காலத்தில் தாதாவாக திகழ்ந்த லகா சிதானா, தற்போது பஞ்சாபில் சமூக ஆர்வலராக செயல்படுகிறார். பல்வேறு விவகாரங்களில் குரல்கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு செப்., மாதம் பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தின் போது, அவரும் சித்தும் தாங்களாக முன்வந்து இணைத்து கொண்டனர். போராட்டம் டில்லிக்கு மாறிய போது, மேடையில் பேசுவதற்கு சிதானாவிற்கும் தடை விதிக்கப்பட்டது. சில தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகே, அவர் பேச அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE