சென்னை:'பொய் வழக்குகளால், தி.மு.க., வெற்றியை தடுக்க முடியாது' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருவாரூரில், டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள், தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர்கள் ஆகியோர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்திய கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டில்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டுவதற்காக, தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை, புரோக்கர்கள் என, முதல்வர் பழனிசாமி., விமர்சித்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய குரல் கொடுக்கும் தி.மு.க.,வையும், கூட்டணி கட்சிகளையும், இதுபோன்ற பொய் வழக்குகள் வாயிலாக தடுத்து விட முடியாது.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
நான் என்ன ஜெ.,வா?
தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்:'என் தொகுதியில், ஸ்டாலின் போட்டி யிடுவாரா' என, ஆளாளுக்கு கேட்கின்றனர். நான் என்ன ஜெயலலிதாவா? ஒருவர், இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்கிற விதி இருந்தும், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்து, அத்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டு, பின், அதற்கான வழக்குக்கு வாய்தா வாங்குவதற்கு? நான் எப்போதும் போல, எனக்கான தொகுதியில் போட்டியிடுவேன்.
ஆனாலும், 234தொகுதிகளில், நான் போட்டியிடுவதாக நினைத்து அல்ல, கருணாநிதி போட்டியிடுவதாக நினைத்து பணியாற்றுவேன்.அ.தி.மு.க., அமைச்சர்களில் ஒருவர் கூட வெற்றி பெற முடியாத வகையில், மக்கள் தீர்ப்பு இருக்கும். மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள, தி.மு.க.,வின் வெற்றியை குறுக்கு வழியில் தடுத்திட நினைக்கும் ஆட்சியாளர்களின் சதிவலைகளை அறுத்தெறிந்திட வேண்டும்.
தேர்தல் களத்தில், நுாற்றுக்கு நுாறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். 'மிஷன் - ௨௦௦' என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம்
பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: இலங்கை சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேயே சந்தித்த பின், பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, ஐ.நா., சபையின் மனித உரிமை ஆணைய கூட்டம் தொடர்பாக, எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஐ.நா., சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின், 46வது கூட்டத்தில், மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு, இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை, பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.இலங்கையில், ௧௩வது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த, பிரதமர் அளவிலும், துாதரக அளவிலும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE