வாஷிங்டன் : 'நீக்கம்' என்ற ஒற்றை வரி உத்தரவின் மூலம், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை, புதிய அதிபர், ஜோ பைடன் வழங்கியுள்ளார். எச் 1 பி விசா மூலம் வேலை செய்யும் இந்தியரின் மனைவி அல்லது கணவருக்கு வழங்கப்படும், எச் 4 என்ற வேலை உறுதி விசாவுக்கு இருந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா முன்னிலையில் உள்ளன. கடந்த, 2019 நிதியாண்டில் வழங்கப்பட்ட, எச்1பி விசாவில், 74 சதவீதம் இந்தியர்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு, 11.8 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை
அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட துறைகளில், அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அமெரிக்க அதிபராக இருந்த, டொனால்டு டிரம்ப், 'அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை' என, பல திட்டங்களை அறிவித்தார். இதற்காக, வெளிநாட்டவருக்கு வழங்கும் விசாக்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தார்.சமீபத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலின்போது, 'விசா முறையில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்படும்' என, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட, ஜோ பைடன் அறிவித்தார்.
தற்போது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், விசா முறைகளை எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அமெரிக்காவில் வேலை பார்க்க, எச் 1 பி விசா பெற்றுள்ள வெளிநாட்டவர்களின் மனைவி அல்லது கணவர், அமெரிக்காவில் வேலை பார்க்க, எச் 4 விசா முறையை, அதிபராக இருந்த, பராக் ஒபாமா, 2015ல் அறிமுகம் செய்தார்.அதற்கு முன், எச் 1 பி விசா பெற்றவர்களின் மனைவி அல்லது கணவருக்கு, வேலை பார்ப்பதற்கான சட்டப்பூர்வமான அனுமதி கிடையாது.
எச் 4 விசா
பராக் ஒபாமாவுக்குப் பின், அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், 2019 இறுதியில், எச் 4 விசா பெற்றுள்ளவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்காமல் இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன் நிர்வாகம் முடிவுக்கு வரும் வரை, எச் 4 விசா பெற்றவர்களுக்கு நிச்சயமற்ற நிலையை டிரம்ப் உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில், எச் 4 விசா பெற்றவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற டிரம்பின் உத்தரவை, 'நீக்கப்பட்டது' என்ற ஒற்றை வார்த்தையில் ரத்து செய்து உள்ளார், ஜோ பைடன்.இதன் மூலம், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அவர் வழங்கியுள்ளார்.இதையடுத்து, எச் 1 பி விசா நடைமுறையில் உள்ள சிக்கல்கள், 'கிரீன் கார்டு' எனப்படும் குடியுரிமை வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை, இந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE