விவசாய பேரணி வன்முறையில் 400 போலீசார் காயம் | Dinamalar

விவசாய பேரணி வன்முறையில் 400 போலீசார் காயம்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (44)
Share
புதுடில்லி: டில்லியில் நேற்று முன்தினம், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில், 400 போலீசார் காயம் அடைந்துள்ளதாக, டில்லி போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடத்த மத்தியஉள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வன்முறையை அடுத்து, டில்லி மட்டுமின்றி,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும், பாதுகாப்பு
விவசாய பேரணி, வன்முறை, போலீசார் காயம் ,வேளாண் மசோதா, செங்கோட்டை, டில்லி

புதுடில்லி: டில்லியில் நேற்று முன்தினம், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில், 400 போலீசார் காயம் அடைந்துள்ளதாக, டில்லி போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடத்த மத்தியஉள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வன்முறையை அடுத்து, டில்லி மட்டுமின்றி,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, 11 சுற்று பேச்சு நடத்தியும் பலனில்லை.இதற்கிடையே, குடியரசு தினமான நேற்று முன்தினம், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்த, விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. இதற்கு, பல்வேறு நிபந்தனைகளுடன், போலீசார் அனுமதியளித்தனர். நிபந்தனைகளை, விவசாய சங்க பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டனர்.


தடை உத்தரவு


ஆனால், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, சீக்கிய மதக் கொடியையும், விவசாய சங்கக் கொடியையும் ஏற்றினர். டில்லியே கலவரக்காடாக மாறியது. இதையடுத்து அங்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு, விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக போலீசார், 22 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, டில்லி போலீசார் கூறியதாவது:வன்முறை தொடர்பாக, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாய சங்கங்களின் தலைவர்கள் ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ், தர்ஷன் பால் உள்ளிட்ட ஆறு பேர் மீது, சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பேரிடம் விசாரித்து வருகிறோம்.வன்முறையில், எட்டு பஸ்கள், 17 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 400 போலீசார் காயமடைந்துள்ளனர். வன்முறை நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை, ஆய்வு செய்து வருகிறோம். அதை வைத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போலீஸ் குவிப்புடிராக்டர் பேரணி தொடர்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சாவினர், போலீசாருடன் பல கட்ட பேச்சு நடத்தி, அமைதியாக பேரணி நடத்துவதாக தெரிவித்தனர். ஆனால், திட்டமிட்டதற்கு முன்பாக, காலை 8:00 மணிக்கே டிராக்டர் பேரணியை துவக்கியதால், வன்முறை வெடித்தது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

டில்லியில் நேற்று, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், பல பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும், உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அமித் ஷா ஆலோசனை


டில்லியில் நடந்த கலவரம், வன்முறை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை அமைச்சக அதிகாரிகள், டில்லி போலீஸ் உயர் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். டில்லியின் நிலைமை பற்றி கேட்டறிந்த அமித் ஷா, அமைதியை உறுதி செய்ய, தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், வாக்குறுதியை மீறி, அனுமதியில்லாத இடங்களில், பேரணியை நடத்தியதற்காக, விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, போலீசாருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினர். இது பற்றி முழுமையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.


உச்ச நீதிமன்றத்தில் வழக்குஇந்நிலையில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
டில்லி எல்லையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, விவசாயிகள் அமைதியாகவே போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசும், விவசாய சங்கங்களும், பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. போராட்டத்தில் வன்முறை வெடித்தது பற்றியும், ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமையில், விசாரணை குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வன்முறை நடந்த செங்கோட்டை பகுதியை, மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் நேற்று ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''செங்கோட்டைக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
நக்சல் ஆதரவு தலைவர்கள் காரணம்?


டில்லியில் நடந்த வன்முறைக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத ஆதரவு தலைவர்களும் இடம் பெற்றது தான் காரணம் என, தெரிய வந்துள்ளது. இந்த வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் சிலரின் பின்னணியே இதற்கு உதாரணம். இவர்களுக்கும், விவசாயத்துக்கும், எந்த தொடர்பும் இல்லை.

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால், ஒரு டாக்டர். ஆனால், விவசாய சங்கத்துக்கு தலைவராக உள்ளார்.மேலும், மாவோயிஸ்ட் ஆதரவாளரான இவர், பி.டி.எப்.ஐ., எனப்படும், இந்திய மக்கள் ஜனநாயக முன்னணி என்ற நக்சல் ஆதரவு அமைப்பையும், நடத்தி வருகிறார்.

அதே போல, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஹன்னான் மோள்ளா, மா.கம்யூ.,வை சேர்ந்தவர். எட்டு முறை, எம்.பி.,யாக இருந்துள்ளார். இப்போது, அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலராகவும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் செயலராகவும் உள்ளார். இவருக்கும், விவசாயத்துக்கும் தொடர்பு இல்லை.

பாரதிய கிசான் சங்கத்தின் உறுப்பிரான ஜக்மோகன் சிங் பாட்டியாலா, மாவோயிஸ்டுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். இவர் ஒரு 'அக்குபஞ்சர்' நிபுணர்.

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வரும், 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், விவசாயிகள் நடத்திய, 'பாரத் பந்த்'தின் போது, 'அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல கூட அனுமதிக்க கூடாது' என்றார். இவர், தேர்தல் தொடர்பான
நிபுணர்.

இவர்களை போல், விவசாயத்துடன் சிறிதும் தொடர்பில்லாத தலைவர்கள் பலர், பேரணியில் பங்கேற்று, விவசாயிகளை, போலீஸ் நிபந்தனைகளை மீற வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு விவசாய சங்கங்கள் விலகல்


வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, 'ராஷ்ட்ரீய கிசான் மஸ்துார் சங்கம், பாரதிய கிசான் சங்கம்' ஆகியவை அறிவித்துள்ளன.

ராஷ்ட்ரீய கிசான் மஸ்துார் சங்கத்தின் தலைவரான வி.எம்.சிங் கூறியதாவது: ராஷ்டிரிய கிசான் மஸ்துார் சங்கம், போராட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும் வரை, எங்களின் எதிர்ப்பு தொடரும். வன்முறை போராட்டங்கள், எங்களுக்கு ஏற்புடையது அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

பாரதிய கிசான் சங்கத்தின் தாகூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், ''இரண்டு மாதங்களுக்கு மேல் அமைதியாக நடந்த இந்தப் போராட்டம், நேற்று முன்தினம் நடந்த வன்முறையால், முடிவுக்கு வந்தது வேதனையளிக்கிறது,'' என்றார்.


சமூக விரோதிகளால் தான் வன்முறைபேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து, சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் அமைதியாக நடத்திய டிராக்டர் பேரணியை, பாதையை மாற்றி செங்கோட்டை வரை நுழைந்து, சீக்கிய அமைப்பு மற்றும் விவசாயிகள் சங்க கொடிகள் ஏற்றப்பட்டதற்கு, போராட்ட களத்தில் இருந்த நடிகர் தீப் சிங் சித்து, தாதாவாக இருந்து சமூக ஆர்வலராக மாறிய லகா சிதானா போன்ற சமூக விரோதிகள் தான் காரணம்.
கடந்த, இரண்டு மாதங்களாக விவசாயிகள் நடத்தி வந்த அமைதிப் போராட்டத்தால் மத்திய அரசு நிலை குலைந்தது. அதனால், போராட்டத்தை சீர் குலைக்க, கிசான் மஸ்துார் சங்கர்ஷ் அமைப்பு மற்றும் நடிகர் தீப்சிங் போன்றவர்களுடன் சேர்ந்து மத்திய அரசு சதி திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கிறோம். தீப் சிங், போராட்டக்காரர்களை துாண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். அவருடன் சென்ற இளைஞர்கள், ரிங்ரோடு செல்வதாக தெரிவித்தனர். மாறாக அவர்களை, செங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார்.டில்லி எல்லையில் தங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர, விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை, தீப் சிங்கும், லகா சிதானாவும் மறுத்துள்ளனர்.
பா.ஜ., - எம்.பி., மறுப்புநடிகர் தீப் சிங் சித்து, பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் தொகுதி பா.ஜ., - எம்.பி.,யான சன்னி தியோலுடன் நெருக்கமாக இருந்தார். கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், அவருடன் இணைந்து ஈடுபட்டார். ஆனால், கடந்த மாதம், தியோலுடன் இருந்த உறவை, சித்து துண்டித்துக் கொண்டார். சன்னி தியோலும் இதை உறுதி செய்து, 'தீப் சிங்கிற்கும், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எந்த உறவும் இல்லை' என, சன்னி தியோல் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X