புதுடில்லி :தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, அடுத்த மாதம், 28ம் தேதி வரை நீட்டித்துள்ள மத்திய அரசு, பிப்., 1 முதல், 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் மாதம், 25ம் தேதி முதல், மத்திய அரசு, நாடு முழுதும் பொது ஊரடங்கை அமல்படுத்தியது. பின், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுதும் வரும் பிப்., 28 ம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது: வரும், 1ம் தேதி முதல், 50 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகளுடன், சினிமா தியேட்டர்கள் இயங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், விரைவில் வெளியிடப்படும். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில், வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்கள், அனைவரது பயன்பாட்டுக்கும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமின்றி, பிற தேவைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், இதர நோயுடையவர்கள் வெளியே வர அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச விமான சேவையை, கூடுதல் வழித்தடங்களில் இயக்க, நிலைமையை கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுக்கலாம்.மக்கள் அளித்த ஒத்துழைப்பினால், நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில், தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை, போலீசார் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE