சென்னை: 'சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெ. நினைவு இல்ல திறப்பு நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடக்கூடாது' என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ. வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு அறிவித்தது. போயஸ் இல்லத்தை அரசு வசம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக் மனு தாக்கல் செய்தார்.வீட்டுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து தீபக் சகோதரி தீபா தாக்கல் செய்த மனு:
நானும் சகோதரரும் தான் ஜெ.வின் சட்டப்பூர்வ வாரிசுகள். எங்களிடம் கேட்காமல் போயஸ் தோட்ட இல்லம் நிலம் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்துவதாக அறிவித்தது சட்டவிரோதமானது.
போயஸ் இல்லமான வேதா நிலையத்தில் தங்கம் பிளாட்டினம் வைரம் வெள்ளி விலை மதிப்பற்ற கலைப்பொருட்கள் உள்ளன. அவற்றை தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அத்தை பயன்படுத்திய தங்கம் வைர வெள்ளி ஆபரணங்களை காட்சிக்கு வைக்கக் கூடாது.
சென்னையின் முக்கியமான பகுதியான போயஸ் தோட்டத்தில் சதுரடி 12 ஆயிரத்து 60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்திருப்பது மோசடி. எனவே நில ஆர்ஜித அதிகாரி பிறப்பித்த இழப்பீடு தொகையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுக்கள் நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி சேஷசாயி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:வழக்கு நிலுவையில் உள்ளது. ஜெ. நினைவு இல்ல திறப்பு நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம்; நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொதுமக்கள் பார்வைக்காக வேதா இல்லத்தை திறந்து விடக் கூடாது.விழா நடக்கும் இடத்தில் பேனர் விளம்பர போர்டு வைக்கக்கூடாது. அந்தப் பகுதி மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தக் கூடாது. வேதா நிலையத்தின் பிரதான வாயிலை மட்டுமே நிகழ்ச்சிக்காக திறக்க வேண்டும். வேதா நிலைய கட்டடத்தை திறக்கக் கூடாது.
பொருட்கள் கணக்கெடுப்பு அவற்றின் மதிப்பீடு பணி இன்னும் முடியவில்லை. மறைந்த முதல்வரின் வாரிசுகளின் உரிமை நலனை புறக்கணித்து விட முடியாது.திறப்பு விழா முடிந்த பின் வேதா இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும். இன்று திறப்பு விழா நடப்பதால் அரசுக்கு உரிமை வந்து விடாது; மனுதாரர்களின் உரிமையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.இவ்வழக்கில் பிப். 15 க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இறுதி விசாரணையை பிப். 24க்கு நீதிபதி சேஷசாயி தள்ளி வைத்தார். 'கேட்டை திறந்து கொள்ளலாம்; பிரதான கதவை திறக்கக் கூடாது' என நீதிபதி தெளிவுபடுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE