புதுடில்லி : சீனாவின், 'டிக்டாக்' செயலியின் இந்தியப் பிரிவு மூடப்படுவதால், 2,000 பேர் வேலையிழப்பிற்கு ஆளாவர் என, அஞ்சப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அனுமதியின்றி தனி நபர் தகவல்களை, வர்த்தக ஆதாயத்திற்கு பயன்படுத்துவதாகவும் கூறி, கடந்த ஆண்டு, சீனாவின், 'டிக்டாக், விசாட்' உள்ளிட்ட, 59 மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, இந்நிறுவனங்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், 59 செயலிகளுக்கு, மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது. அதனால், 'டிக்டாக், ஹெலோ' ஆகிய செயலிகளின் இந்திய பிரிவு மூடுவதாக, அவற்றை நிர்வகிக்கும், சீனாவின் 'பைட் டான்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, டிக்டாக் சர்வதேச பிரிவின் தலைவர், வனேசா பப்பாஸ், துணை தலைவர், பிளேக் சாண்ட்லீ ஆகியோர், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தின் இந்திய பிரிவைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, மூன்று மாத ஊதியம், பணிக்கொடை வழங்கப்படும். இது தொடர்பான நிர்வாக பணிக்காகவும், மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தவும், சட்டம், நிர்வாகம், மனித வளம், கணக்கு உள்ளிட்ட பிரிவுகள் மட்டும், சொற்ப ஊழியர்களுடன் இயங்கும். இந்தியாவில் மீண்டும் எப்போது செயல்படத் துவங்குவோம் என தெரியவில்லை. எனினும், இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட உறுதி அளித்திருப்பதால், மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல, இதர செயலிகளின் நிர்வாகங்களும், ஆட்குறைப்பு செய்யும் என்பதால், மேலும், 2,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE