உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
சுபஸ்ரீ, பழங்காநத்தம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாற்றம் வேண்டும்; இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை' என, ரசிகர்களை உசுப்பேத்திய நடிகர் ரஜினி, கடைசியில் தன் உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் வேண்டாம் என, விலகி விட்டார்.இதையடுத்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,விலும், சிலர், பா.ஜ.,விலும் ஐக்கியமாகினர்.இதைக் கேள்விப்பட்ட ரஜினியும், ரசிகர் மன்ற பதவியை ராஜினாமா செய்த பின், விருப்பப்பட்ட கட்சியில் சேரலாம் என, தன் ரசிகர்களுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்.

தமிழகத்தில் ஊழலில் ஊறிப்போன திராவிடக் கட்சிகளை விரட்டியடித்து, மாற்றத்தை ஏற்படுத்த தான், அவரது ரசிகர்கள், 'அரசியலுக்கு வா தலைவா' என, போராடினர் என்பது, கடந்த கால வரலாறு.அந்த ரசிகர்கள் சிலர் இன்று, தி.மு.க., வில் இணைந்துள்ளது வேடிக்கையானது. ரஜினி ரசிகர்கள், அவரின் தலைமையில் நல்லதொரு ஆட்சி மலர வேண்டும் என, விரும்புகின்றனர் என்று தானே, மக்கள் நினைத்தனர். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக, ஊழல்வாதிகளுடன் கைக்கோர்த்திருப்பது, அவர்களின் முகமூடியைக் கிழித்துள்ளது. உண்மையிலேயே ரஜினி ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்... ரஜினி விரும்பிய, ஆன்மிக அரசியல் கோட்பாடுடன் உள்ள கட்சியுடன் அல்லவா, கைக்கோர்த்திருக்க வேண்டும்?

ஹிந்து விரோத கட்சியான, தி.மு.க.,வில் அவர்கள் இணைந்திருப்பது, நகைப்புக்குரியது. இவர்கள், ரஜினி மன்றத்தில் இருந்தது எல்லாம், அவர் கட்சி துவக்கி, ஆட்சி பிடித்தால், தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என, எதிர்ப்பார்த்திருந்தனர்; அதனால் தான், அவர் இல்லை என்றாலும், மந்தி போல, தாவி விட்டனர். 'ரஜினிக்காக உயிரைத் தருவேன்' என, மார் தட்டும் கூட்டம், அவருக்கு சற்றும் உடன்பாடு இல்லாத, தி.மு.க.,வில் இணைந்தது, தன் மனசாட்சிக்கு செய்யும் துரோகம் அல்லவா? இப்போது புரியுதா... இது தான் அரசியல். கொள்கையாவது கத்தரிக்காயாவது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE