புதுடில்லி:'தாண்டவ் வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'அமேசான் பிரைம்' தளம், திரைப்படங்கள் மற்றும், 'வெப் சீரிஸ்' எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக தயாரித்தும், வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொடரை, சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. 'பாலிவுட்' நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதில், பல காட்சிகள் மற்றும் வசனங்களில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு மாநிலங்களிலும், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வலைத் தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்களை கைது செய்வதில் இருந்து, ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கோரப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 'கைது நடவடிக்கையில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது' என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக, உயர் நீதிமன்றங்களை நாடுமாறு உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE