நாகர்கோவில்: ஜம்மு -காஷ்மீரில் 10 ஏக்கரில் திருப்பதி கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறினார்.
கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் திருப்பதி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான 10 ஏக்கர் நிலம் ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு வழங்கியுள்ளது. விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் துவங்கும். இதேபோன்று தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 35 தேவஸ்தான கோயில்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் மூலம் கோ பூஜைக்காக பசு மற்றும் கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழைகளுக்கு விரைவில் இலவச திருமணம் நடத்தப்பட உள்ளது. இங்கு நடக்கும் திருமணங்களுக்கு இலவச தாலி வழங்கப்படும். திருமணம் நடத்த விரும்புவோர் 15 தினங்களுக்கு முன்னர் தேவஸ்தானத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோசாலை மற்றும் திருமண மண்டபம் அமைக்கப்படும்.
தற்போது தேவஸ்தான கோயிலில் உள்ள கொடிமரம் கடல் காற்றினால் அரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தங்க முலாம் பூசப்படும். இங்கு பிரம்மாண்ட கருடாழ்வார் சிலை நிறுவப்படும். மேலும் கன்னியாகுமரி பகுதியில் திருப்பதி கோயிலுக்கான அலங்கார வளைவு நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE