அ.தி.மு.க.,வில் திராவிடக் கொள்கைகளை பின்பற்றும் தலைவர்களும் இல்லை. மக்களை சந்தித்து, கவர்ச்சியாக பேசி ஓட்டு சேகரிக்கும் தலைவர்களும் இல்லை. எனவே, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.- தி.மு.க., பொதுசெயலர் துரைமுருகன்.
'எல்லாம் இருக்கும், தி.மு.க., மீது, மக்களுக்கு நல்ல நம்பிக்கை இல்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேச்சு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னையில், அவரது நினைவிடத்தில், புதிய வடிவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம், உலகத்தின் எட்டாவது அதிசயம்.-அமைச்சர் உதயகுமார்.

'அடுத்ததாக, குஜராத்தில், சர்தார் வல்லபபாய்படேலுக்கு அமைக்கப்பட்டது போன்ற, உலகின் மிகப் பெரிய சிலையை, உங்கள் 'தங்கத் தலைவிக்கு' அமையுங்களேன்...' என, 'அறிவுரை' கூறத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி.உங்கள் கட்சியே பெரிய உலக அதிசயம் தான்.
தி.மு.க., நடத்தி வரும் மக்கள் சபை கூட்டங்களில் வெளிப்பட்ட, அ.தி.மு.க., அரசின் கொள்ளைகள், குடியரசு தின கிராம சபை கூட்டங்களிலும் எதிரொலிக்கும் என்ற பயத்தில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்
'ஒரு மாதத்திற்கும் மேலாக, தி.மு.க., நடத்திய மக்கள் சபை கூட்டத்தால், எந்தப் பயனும், யாருக்கும் இல்லாத நிலையில், குடியரசு தின கிராம சபை கூட்டத்திற்கு, நீங்கள் கூறும் காரணம் பொருத்தமாக இருக்காது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.
டில்லியில், அமைதியாகப் பேரணியில் சென்ற விவசாயிகளின் மீது, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இது, குடியரசு நாளில் குடிமக்களை நசுக்கும் கொடூரம். உழைக்கும் மக்களுக்கு எதிரான, மோடி அரசின் அரசப்பயங்கரவாதப் போக்கை கண்டிக்கிறோம்.- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வார்த்தைகளில் சிலவற்றை மட்டும் நீங்கள் கடன் வாங்கியுள்ளது போல தெரிகிறதே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
தமிழே தெரியாவிட்டாலும், போகுமிடங்களில் எல்லாம் ராகுல் செல்வாக்கை கண்டு, அ.தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில், ராகுலை போல தங்களுக்கு கூட்டம் இல்லை எனவும் அதிர்ச்சி அடைந்துள்ளது.- காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்
'ராகுலுக்கு கூட்டம் சேர்வது உண்மை தான். அதற்காக, கொங்கு மண்டல, அ.தி.மு.க., அதிர்ச்சி என்பது தான், ஆச்சர்யமாக உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை.
இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், முன் கூட்டியே தெரிவித்து, டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது.- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'ஒருதலைப்பட்சமாக அறிக்கை விடுபவர் யார் என்ற போட்டியை தமிழகத்தில் வைத்தால், உங்களுக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும்...' என, காட்டமாக தெரிவிக்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE