வயநாடு: பெரும்பாலான விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் புரியவில்லை. அது குறித்து புரிதல் ஏற்பட்டால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், அங்கு கல்பேட்டா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: நாட்டில் இன்றைய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெளிவாகியுள்ளது. 2 அல்லது 3 பெரிய முதலாளிகளுக்காக, பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தி கொண்டுள்ளார். இன்று ஒவ்வொரு துறையும் தன்னிச்சையாக 3 அல்லது 4 பேரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. இது உ.பி.,யின் பட்டா பர்சவுல் பகுதியில் இருந்து துவங்கியது. அங்கு விவசாயிகளின் நிலம் பறிக்கப்பட்டது. அது பெரிய பிரச்னை என்பதை உணர்ந்த நான், காங்கிரஸ் கட்சிக்குள் நீண்ட ஆலோசனை நடத்தினேன். இதனால், புதிய நில கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மசோதாவை நீக்கிய நாங்கள், புதிய மசோதா கொண்டு வந்தோம். அதில், விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் பாதுகாப்பு ஆகியவை உறுதிபடுத்தப்பட்டன.
மோடி, பிரதமரான பின் இந்த மசோதாவை நீக்க முயன்றார். ஆனால், நாங்கள் பார்லிமென்டில் கடுமையாக போராடி தடுத்து நிறுத்தினோம். இதனையடுத்து தனது கட்சி முதல்வர்களிடம் பேசிய மோடி, தன்னால் பார்லிமென்டில் அந்த மசோதாவை தோற்கடிக்க முடியவில்லை. இதனால், மாநிலங்களில் அந்த மசோதாவை அழித்துவிடுங்கள் என தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பெரும்பாலான விவசாயிகளுக்கு புரியவில்லை. அதனை அவர்கள் புரிந்து கொண்டால், நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE