புதுடில்லி: இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் இந்தியா, 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வழங்கியுள்ளது. இதற்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா, நல்லெண்ண அடிப்படையில் நமது அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி, பூடான், மாலத்தீவு நேபாளம், வங்கதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது. இதற்காக மத்திய அரசுக்கு அந்நாட்டு தலைவர்கள் நன்றித் தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்தது.

மும்பையில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து, கொழும்பு சென்றடைந்தது. அந்த மருந்துகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டார். இலங்கைக்கு தடுப்பூசி மருந்து வழங்கி உதவி செய்த இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அடுத்த சில நாட்களில் சீரம் நிறுவனத்திடம் இருந்து 20 முதல் 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து கொள்முதல் செய்யவுள்ளதாக அதிபரின் ஆலோசகர் லலித் வீராதுங்கா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE