புதுடில்லி: மஹாராஷ்டிராவின் நாக்பூர் அருகே 12 சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற கிளையின் பெண் நீதிபதி , பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது என தீர்ப்பு அளித்துள்ளார்.
அதேநேரத்தில், மலேஷியாவில், 12 வயதான வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 பிரம்படிககளும் அளிக்கும்படி, பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மஹாராஷ்டிராவின், நாக்பூரைச் சேர்ந்த, 39 வயதுள்ள ஒருவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த, 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கீழ் நீதிமன்றம், மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தின், நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கணேடிவாலா, ஜன., 19ல் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது. அதனால், போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை விதிக்க முடியாது. பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்க முயன்றதாக, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தான் நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், அந்த நபரை விடுவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ., பாப்டே அமர்வில், அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால் நேற்று குறிப்பிட்டார். அதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து, அமர்வு உத்தரவிட்டுஉள்ளது.உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மலேஷியாவில்
மலேஷியாவில், 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 2 ஆண்டுகளில், தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என, சிறுமியை அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனையும், மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தந்தை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை முடிவில், தந்தைக்கு 24 பிரம்படிகளும், 1,050 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி குணசுந்தரி உத்தரவிட்டார்.
இந்த வரலாற்று தீர்ப்பை வழங்கிய பெண் நீதிபதியான குணசுந்தரி மலேசிய தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE