புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பரிசோதனைகளின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் நாட்டிலேயே உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்கள் 2 கோடி பரிசோதனைகளை கடந்துள்ளன.
நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. பல மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. கேரளா மற்றும் மஹா., மாநிலங்கள் மட்டும் இன்னமும் அபாய பகுதியில் உள்ளன. இரு மாநிலங்களிலும் முறையே 9.5% மற்றும் 5% ஆக பாசிடிவ் விகிதம் உள்ளது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் 10 பேருக்கு தொற்று உறுதியாகிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் இரு மாநிலங்களிலும் குறைவு.

ஜன., 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் கேரளாவில் 7.4 லட்சம் பரிசோதனைகள் நடந்துள்ளன. அதில் 70,600 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 10% ஆகும். சோதனைகள் அதிகரிக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை உயரும் என்கின்றனர் நிபுணர்கள். உத்தர பிரதேசத்துடன் கேரளாவை ஒப்பிடும் போது, அங்கு அதே காலக்கட்டத்தில் 16.7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 0.3% பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. 12.3 லட்சம் பரிசோதனைகளுடன் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது. 11.4 லட்சம் பரிசோதனைகளின் மூலம் பீஹார் மூன்றாமிடம், டில்லியில் 8.9 லட்சம் பரிசோதனைகள், அடுத்ததாக தமிழகத்தில் 7.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் ஆந்திராவில் குறைந்த அளவாக 5.1 லட்சம் பரிசோதனைகளாக குறைத்துள்ளனர்.

தேசிய அளவிலும் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிச.,27 முதல் ஜன.,9 வரை 1.2 கோடி பரிசோதனைகள் அகில இந்திய அளவில் நடத்தப்பட்டன. அதுவே ஜன.,22 உடன் முடிந்த அடுத்த 15 நாட்களில் பரிசோதனைகள் எண்ணிக்கை 90 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் தான் இதுவரை நாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் பரிசோதனைகளை செய்துள்ளன. மஹாராஷ்டிராவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 1.4 கோடி பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தில் அதை விட 30 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட மஹா.,வை விட 20 லட்சம் பரிசோதனைகள் கூடுதல் ஆகும். இங்கு இதுவரை 1.6 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் 1.3 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்பது தெரியவருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE