புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் பேரணியில், அத்துமீறி செங்கோட்டைக்குள் நுழைந்து சீக்கிய கொடி ஏற்றப்பட்டு அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, சிலர் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும் பேரணி நடத்தினர். டில்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை வரை நுழைந்து, அங்கு சீக்கிய மத கொடியை ஏற்றினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற போது வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

டில்லியின் சாந்திவன் ரெட் லைட் பகுதியில் ஆயிரகணக்கானோர் கூடியதுடன், தடுப்புகளை டிராக்டர் மூலம் தகர்த்தனர். போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் முன்னேறி சென்று, செங்கோட்டைக்குள் சென்றனர். இது தொடர்பாக ஐபிசி 124ஏ( தேச துரோக வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதியம் 12: 15 மணியளவில் 30 முதல் 40 டிராக்டர்கள் மற்றும் 150 மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் வாகனங்களில் போராட்டக்காரர்கள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரிடம் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்ய போராட்டக்காரர்கள் முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகள் தப்ப முடியாது
டில்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் நடத்திய பேரணியில் கலவரம் ஏற்படுத்தியது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, முகத்தை அடையாளம் காட்டும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில விவசாய சங்க தலைவர்கள், போலீசிடம் அளித்த உறுதிமொழியை மீறியதே கலவரம் ஏற்படக் காரணம். தர்ஷன்பால் சிங், சத்னம் சிங் பன்னு மற்றும் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசினர். விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாத, பயங்கரவாத எண்ணமுடையவர்களை, சங்க தலைவர்கள் பேரணியில் முன்னிறுத்தினர். கலவரத்திற்கு காரணமான ஒருவரும் தப்பிக்க விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE