புதுடில்லி: கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்யும் விதமாக, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினருக்கு, சில சலுகைகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன், பிப்.,1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து, தற்போது தான், நாடு மீண்டு வருகிறது. வைரஸ் தாக்கத்தால், பலர் வேலையை இழந்துள்ளனர்; பலருக்கு சம்பளக் குறைப்பு நடந்துள்ளது.
இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அதே நேரத்தில், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், மக்களின் வருவாயை பெருக்குவது, நுகர்வை அதிகரிப்பது, முதலீடுகளை ஊக்குவிப்பது ஆகிய முக்கிய இலக்குகளுடன், 2021 - 2022 பட்ஜெட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நடுத்தர வர்க்க மக்களுக்கு, இந்த பட்ஜெட்டில் கீழ்கண்ட சலுகைகளை எதிர்பார்க்கலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
* வீட்டில் இருந்து வேலை பார்ப்போர் செய்யும் செலவுகளுக்கு, வரியில் இருந்து கழித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படலாம்
* வருமான வரியில், தற்போது, 50 ஆயிரம் ரூபாய், நிரந்தரக் கழிவாக உள்ளது; இது உயர்த்தப்படலாம்
* வீட்டுக் கடனில் திருப்பி செலுத்தும் அசல் தொகை, தற்போது வரிச் சலுகையுடன் சேர்க்கப்படுகிறது. திருப்பி செலுத்தும், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான அசலுக்கு, தனியாக வரிச் சலுகை அளிக்கப்படலாம்
* அதேபோல் தற்போதுள்ள, 1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகையை, 2.53 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளது
* கொரோனாவால், மருத்துவக் காப்பீட்டு வாங்குவது அதிகரித்துள்ளது. அதனால், இதற்கான வரிச் சலுகை உச்சவரம்பு உயர்த்தப்படலாம்.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE