புதுடில்லி: 2020ம் ஆண்டில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 86வது இடத்தில் உள்ளது.
சர்வதேச கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 (சிபிஐ) எனும் 2020ம் ஆண்டில் ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. 180 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா கடந்த 2019ம் ஆண்டை விட 2020ல் ஆறு இடங்கள் பின்தங்கி 86வது இடத்திற்கு சென்றுள்ளது. பொதுத்துறையில் நிலவும் ஊழலின் அளவைக் கொண்டு 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்களுடன் ஊழலை வகைப்படுத்தியுள்ளன. அதாவது, அதிக மதிப்பெண் உள்ள நாடுகள் ஊழல் குறைந்ததாகவும், குறைவான மதிப்பெண்கள் கொண்ட நாடு ஊழல் அதிகமானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில், 40 மதிப்பெண்களுடன் இந்தியா 86வது இடத்தில் உள்ளது. கடந்த 2019ல் 41 மதிப்பெண்களுடன் 80வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் உணர்வுக் குறியீடானது, எந்த நாட்டிலும் உண்மையான ஊழல் அளவை பிரதிபலிக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுவதாகவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் விளக்கமளித்துள்ளது. 88 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரண்டு நாடுகளும் வெறும் 12 மதிப்பெண்களுடன் பட்டியலில் 179வது இடத்தை பிடித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE