திருவண்ணாமலை: கடந்த முறை மத்தியில் ஆட்சிக்கு வர முடியாததால் கல்விக்கடனை ரத்து செய்ய முடியவில்லை எனக்கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் வென்றவுடன் தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய பிரசார வியூகத்தை இன்று (ஜன.,29) துவக்கிய திமுக தலைவர் ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரில் மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின் பின்னர் பேசியதாவது: கடந்த முறை மத்தியில் ஆட்சிக்கு வர முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்ய முடியவில்லை. நிச்சயம் தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற உடன் தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

அதிமுகவினர் தான் கூட்டுறவு கடன் லட்சக்கணக்கில் வாங்கியிருந்தார்கள். ஆனாலும் எந்த கட்சி என்று பார்க்காமல் தமிழக மக்களாய் பார்த்து ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை ரத்து செய்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி. முதியோர் உதவித்தொகை கட்சி பாகுபாடு இல்லாமல் வழங்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்டாலினிடம் குறைகள் அடங்கிய மனுக்கள் அளிப்பதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட திமுக.,வினர் பெட்டியில் சேகரித்து பெட்டியை சீல் வைத்தனர்.