சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை

Added : ஜன 29, 2021
Share
Advertisement
கொடுப்பது நல்ல செயல், ஆனால் வாங்கிக் கொள்வது தவறு என்பது இதுநாள் வரை நல்லொழுக்க போதனையாக நமக்குக் கற்பிக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆனால் யாரிடமிருந்தும் எதையுமே பெறாமல் நம்மால் வாழ முடியுமா? பெறுவதை எப்படி நம் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவது? சத்குருவின் பார்வையில் இக்கேள்விகளுக்கு விடையாக வருகிறது இக்கட்டுரை.சத்குரு:எதையாவது பெற வேண்டும் என்றால்
கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை

கொடுப்பது நல்ல செயல், ஆனால் வாங்கிக் கொள்வது தவறு என்பது இதுநாள் வரை நல்லொழுக்க போதனையாக நமக்குக் கற்பிக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆனால் யாரிடமிருந்தும் எதையுமே பெறாமல் நம்மால் வாழ முடியுமா? பெறுவதை எப்படி நம் வாழ்வில் மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவது? சத்குருவின் பார்வையில் இக்கேள்விகளுக்கு விடையாக வருகிறது இக்கட்டுரை.

சத்குரு:

எதையாவது பெற வேண்டும் என்றால் நயமாய், கனிவாய் பெற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. நம் சமூகமும் இதையே சொல்லி கொடுத்து வந்திருக்கிறது.

கொடுப்பது தேவையான செயல். ஆனால் வாங்கிக்கொள்வது தவறு, தவிர்க்கப்பட வேண்டியது. ஆம், வாங்கிக்கொள்வது கூடவே கூடாது, வாங்குவது அருவருப்பிற்குரியது என இதுநாள் வரை நமக்கு கற்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஏற்பது மிக முக்கியமான செயல். எதையேனும், யாரேனும் கொடுத்தால் அதைப் பெற ஒரு குறிப்பிட்ட மனநிலை அவசியம்.

வரட்டு கௌரவம் உடைக்கப்பட்டு, சங்கோஜ நிலை கடந்து ஒரு நயமான மனோபக்குவம் தேவை. வாழ்வின் அம்சத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள், எல்லாமே 'பெறு'தலை சார்ந்தே நிகழ்கிறது.

உதாரணமாக நாம் உடுத்தும் இந்த ஆடையை பாருங்கள், அதில் எத்தனை அம்சங்களின் பங்களிப்பு இருக்கிறது! பருத்தி விதை - அந்த விதையை விதைக்கும் விவசாயி, அந்த விதை மண்ணில் வளர உதவும் லட்சக்கணக்கான "இயற்க்கை நுட்பம்", ஆடை தயாரிப்பவர், இடைத்தரகர், விநியோகஸ்தர், விற்பனையாளர் - இவர்கள் உழைப்பை 'கொடு'த்ததால்தான் நாம் ஆடையை பெறுகிறோம். நாம் உண்ணும் உணவுகூட அப்படித்தான், உணவு உடம்புக்குள் சென்று ஒரு உயிராக மாறுவதற்கு எத்தனை விதமான காரணிகளின் பங்களிப்புகள் உள்ளது.
உண்ணும் உணவு, உடுத்தும் உடை எல்லாவற்றிலும் யாரோ கொடுப்பதைத்தான் நாம் பெறுகிறோம் என்பதை உணரும்போது, நாம் 'ஏற்'பதை கனிவாய் நிகழ்த்த முடியும்.

நன்றி உணர்வில் நெகிழ்ந்து போகலாம். நன்றி உணர்வு என்பது குணம் அல்ல, அது நம்முள் தானாக நிகழ வேண்டியது, பொங்கி வழிய வேண்டியது. நன்றி உணர்வு கற்று தர வேண்டிய பழக்கமும் அல்ல.

எல்லா உதவிக்கும் கைமாறாக பயன்படுத்தும் வகையில், 'நன்றி' என்னும் மந்திரச் சொல்லை நமக்கு பழக்கப்படுத்தி உள்ளனர். ஆனால் நன்றி உணர்வு வளர்க்கப்பட கூடிய நெறி அல்ல, யாருடனோ, எதனுடனோ ஒரு 'பெறுதல்' நிகழும்போது தானாக நெகிழ்ந்து மனதுக்குள் நடக்கும் செயல் 'நன்றி உணர்வு'.

ஒருவேளை, நீங்கள் உயிர் போகும் பசியில் இருக்கும்போது யாரேனும் ஒரு கவளம் சோற்றை உங்களுக்கு கொடுத்தால் அவருக்கு உங்கள் நன்றியை ஒரு சில கண்ணீர் துளிகளால் தானே சொல்வீர்கள்? ஆனால் பசி இல்லாத வேறொரு தருணத்தில் ஒரு தட்டு நிறைய உணவை கொடுத்தால் உங்களுக்கு அது பெரிய விஷயமாகவே இருக்காது.

பசியோடு இருக்கும்போது உணவு தரும் ஒருவரிடம் நீங்கள் காட்டும் நன்றியுணர்வு உங்கள் அனுபவத்தால்தான் நிகழ்கிறது. ஒரு வார்த்தையாக, ஒரு ஸ்பரிசமாக, சில கண்ணீர் துளிகளாக நன்றி உணர்வு வெளிப்படும்போது வார்த்தைகள் அவசியமற்று போகிறது.

உங்களை இந்த மண்ணில் உயிருடன் வைத்து இருக்க உதவும் சுவாசக் காற்று, உண்ணும் உணவு, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், இப்படிப் படைப்பின் அத்தனை சாராம்சங்களும் ஏதோ ஒரு வகையில் எதையாவது உங்களுக்கு கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் இந்தச் சங்கிலி தொடர்பை உணர நேரிட்டால், உங்களுக்குள் உண்டாகும் நன்றி உணர்வை தவிர்க்கமுடியாது, எதுவும் செய்யாமலேயே அந்த அற்புதமான உணர்வை நீங்கள் உணரமுடியும். நாம் எதையாவதையோ, யாரிடமாவதோ பெறுகிறோம் என்கிற உணர்வு மேலிட்டால் நன்றியுணர்வு நமக்கு அவர்கள்பால் பெருகத் தொடங்கிவிடும்.

உயிரின் இயக்கத்தை உணர நேர்ந்தாலேபோதும், எதையும் செய்யாது தலைவணங்கி அடக்கத்துடன் ஏற்றுகொள்ள காத்திருங்கள். நீங்கள் ஒருவேளை உங்கள் அகங்காரத்தை தலை தூக்கி, இந்த பூமிக்கே அரசனைப்போல் நினைத்துகொண்டு வாழ்ந்தால், நீங்கள் இந்த வாழ்க்கை தரும் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள் அல்லவா? அப்படி அல்லாது நயந்து வாங்கிக் கொள்ளும், தயக்கமே இல்லாது பெற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்து பாருங்கள், உங்கள் மனதில் நன்றி உணர்வு குழையும்.

யோகக் கலையின் அத்தனைச் செயல்களும் தயக்கம் இல்லாது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் ஆழமான பக்குவத்தை தரும் வழிமுறைகளை பயிற்றுவிப்பதாகும். அந்த வழிகள் உங்களுடைய நடைமுறை அனுபவங்களை கடந்ததாக இருக்கும். யோகத்தின் குறிக்கோளும் அதுவே. சிலருக்கு அது குறிப்பிட்ட வழிகளை திறந்துவிடும்.

ஆன்மீக பயிற்சியை அளிப்பதில் ஒரு கடினமான பகுதியே அவர்களை எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் மன பக்குவத்திற்கு கொண்டு வருவதே. அவர்கள் தங்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்களேயானால், அவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுப்பது எளிதான செயலே. ஒருவர் பசியில் இருந்தால், அவரை உண்ண வைப்பது எளிது. ஆனால் ஒருவருக்கு பசியை உண்டாக்குவது என்பது கடினமான வேலை.

இந்த வாழ்க்கையின் போக்கே எப்போதும் எதையாவது பெற்றுக்கொண்டே இருப்பதுதான். கொடுப்பதற்கு, உங்களிடம் உங்களுடையது என்று எதுவும் இல்லை. இங்கு எல்லாமே பெறுவதுதான், கனிவாக பெற்று தாரளமாக பகிர்வதுதான். அது மட்டும்தான் இங்கு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X