இந்திய நிகழ்வுகள்
விவசாயிகள் வெளியேறுமாறு போராட்டம்: சிங்கு பகுதி மக்கள் மீது தடியடி
புதுடில்லி: டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் கலைந்து செல்லுமாறு கல் மற்றும் கம்புகளை வீசினர். இதனை தொடர்ந்து இருதரப்பினர் மோதல் நடக்காமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசா் காயமுற்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
சி.ஆர்.பி.எப்., வீரர் கொலை
ராய்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் உள்ளது. இங்கு நேற்று, சக வீரர்கள் பிரமோத் குமார் சாரி, 27, சந்தோஷ் வச்சம், 26, ஆகியோர் மீது, திடீரென துப்பாக்கியால் சுட்ட, கான்ஸ்டபிள் கிரிஷ் குமார், 25, முடிவில் தன்னையும் சுட்டுக்கொண்டார். இதில் பிரமோத் குமார் பலியான நிலையில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிரிஷ் குமார், மனநிலை பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
.பாலியல் பலாத்காரம்: 6 பேர் கைது
படான்: உத்தர பிரதேசத்தின் படான் மாவட்ட வனப்பகுதியில், ஐந்து மாதங்களுக்கு முன், 32 வயது பெண்ணை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. வழக்கு பதிவு செய்த போலீசார், ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். கொலை மிரட்டல் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண், இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்ட மேலவையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.சி.,
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.சி., பிரகாஷ் ராத்தோட், அம்மாநில சட்ட மேலவையில், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த காட்சிகள், 'டிவி'களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின.
தமிழக நிகழ்வுகள்
அதிர்ஷ்டக்கல் 'ஆசை' காட்டிய கும்பல் சுற்றிவளைப்பு: தமிழகம், கேரளாவை சேர்ந்த 22 பேர் கைது
பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அதிர்ஷ்ட கல் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி செய்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே இரு ஆம்னி பஸ்கள் எரிந்து நாசம்
கோவை,:-கோவை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ஆம்னி பஸ்கள், திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த செங்கத்துறையைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு சொந்தமான இரு ஆம்னி பஸ்கள், கோவை -- சென்னை இடையே இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால், சில மாதங்களாக பஸ்கள் இயக்கப்படவில்லை. சூலுார் முத்துக்கவுண்டன்புதுாரில் உள்ள, தனியார் குடோன் வளாக காலி இடத்தில், சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஒரு பஸ்சில் இருந்து கரும்புகை வெளியேறி, தீப்பற்றியது.தீ மளமளவென பஸ் முழுக்க பரவி, அருகில் இருந்த பஸ்சும் தீப்பிடித்தது. இரு பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஐந்து பேர் தற்கொலை வழக்கு வீடியோ பதிவு சிக்கியது
விழுப்புரம்: தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான, வீடியோ பதிவு கிடைத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்,37; தச்சு தொழிலாளி. இவர், கடந்த டிச., 13ம் தேதி தனது மனைவி விமலேஸ்வரி, 30; மகள்கள் ராஜ்ஸ்ரீ, 6; நித்யஸ்ரீ,5; மற்றும் மகன் சிவபாலன், 4; ஆகியோரை கொன்று தற்கொலை செய்துக் கொண்டார்.இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மோகன் மற்றும் விமலேஸ்வரி மொபைல் போன்களை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி இருந்தனர்.இதில், மோகனின் மொபைல் போன் 'லாக்' விடுவிக்கப்பட்டது. மொபைலில், மோகன் தனது குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.அதில், நாங்கள் கடவுளிடம் செல்கின்றோம் என்ற வார்த்தை மட்டும், மோகன் பதிவு செய்துள்ளதாக போலீசார் கூறினர்.மேலும், விமலேஸ்வரியின் மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்பிறகே, மோகன் குடும்பத்தினரின் தற்கொலைக்கான காரணங்கள் தெரியவரும்.
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் குழந்தை பலி: மூவர் படுகாயம்
விக்கிரவாண்டி: இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நான்கு மாத குழந்தை இறந்தது. மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

21 குடிசைகள் எரிந்து நாசம்
அனகாபுத்துார் : அனகாபுத்துாரில், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், 21 குடிசைகள் நாசமாயின.
அனகாபுத்துார், சாந்தி நகர் பகுதியில், நுாற்றுக்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று காலை, 10:50 மணிக்கு, ஏழாவது தெருவிலுள்ள விஜய், 21, என்பவர் வீட்டில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.தீ வேகமாக பரவி, கொழுந்துவிட்டு எரிந்ததால், வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்தது. இதனால் தீ பரவி, குடிசை வீடுகள் வரிசையாக எரிந்தன. தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், 11:40 மணிக்கு தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 21 குடிசைகள் நாசமாகின. எலக்ட்ரானிக்ஸ், உடை உள்ளிட்ட பொருட்களும் சாம்பலாகின.சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காதலியை குத்திய காதலன் தற்கொலை
புழல் : காதலியை கத்தியால் குத்திய காதலன், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE