புதுடில்லி : கொரோனா தாக்கத்தால், வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை எழுச்சி காணச் செய்யும் மிகப் பெரிய சவாலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். இந்த சவாலை, அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது, நாளை அவர் தாக்கல் செய்ய உள்ள, மத்திய பட்ஜெட்டில் தெரியவரும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 - 22ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
கொரோனா தாக்கத்தால், அனைத்து துறைகளின் வளர்ச்சி முடங்கிஉள்ளது. இதன் எதிரொலியாக, அரசு வருவாய், வெகுவாக சரிவடைந்து, நிதிப் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கினால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சியின் சரிவை தடுக்க முடியும். அரசு வருவாய் குறைந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியான நிலையை பட்ஜெட் மூலம், நிர்மலா சீதாராமன் எப்படி சமாளிப்பார் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெருக்கடி
இது குறித்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறும்போது, '' கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை விரைவாக சீரமைக்க, அரசு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது,'' என, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில், வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் அரசு செலவினம், 12 - 14 சதவீதம், அதாவது, 35 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களிடம் அதிக பணப்புழக்கத்தை உருவாக்கினால் தான், அவர்களது தேவை உயர்ந்து, செலவினம் அதிகரிக்கும்; இது, அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
முக்கிய நோக்கம்
அதேசமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், வேலையிழந்தோர் ஆகியோருக்கான நிவாரணங்களுக்கும், முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடி, அரசுக்கு உள்ளது.
இது குறித்து, சிட்டி குழுமத்தின் பொருளாதார வல்லுனர் சமிரன் சக்ரவர்த்தி கூறியதாவது: கடந்த ஆண்டு, கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில், மக்களை காக்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த நிலையில் இருந்து, அடிப்படை கட்டமைப்பு துறைகளை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என, தெரிகிறது.இதற்கு அதிக நிதி தேவைப்படும். ஏற்கனவே, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறைக்கு நிர்ணயித்த, 3.4 சதவீத இலக்கு, தற்போது, 7.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கட்டாயம்
வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்காத சூழலில், அதை அதிகரிப்பதற்கான திட்டங்களை, பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், பல்வேறு துறைகளுக்கு அளித்த ஊக்கச் சலுகைகளை நிறுத்தாமல், வரும் நிதியாண்டிலும் தொடர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுஉள்ளது. இந்த சவால்களை எந்த வகையில், எத்தகைய உத்திகளை பயன்படுத்தி, நிர்மலா சீதாராமன் சமாளிப்பார் என்பது, நாளை மறுநாள், அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மீட்சி - வளர்ச்சி
வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பதுடன், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இரு நோக்கங்கள், மத்திய அரசுக்கு முக்கியமானதாக உள்ளன. அவற்றின் அடிப்படையில், மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.விவசாயம், சேவைகள், உள்நாட்டு தயாரிப்பு, வீட்டு வசதி துறைகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். சிறப்பு திட்டங்கள், ஊக்கச் சலுகைகள் ஆகியவற்றின் வாயிலாக, வேலைவாய்ப்புகளை உருவாக்க, பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என, எதிர்பார்ப்பதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.