திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது; இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம், தி.மு.க.,வுக்குள்ளும் பிரச்னைகளை எழுப்பியுள்ளது. அந்த கட்சியின் எம்.பி., ஜெகத்ரட்சகன் தான், ஸ்டாலினுக்கு வேல் வழங்க ஏற்பாடு செய்தாராம். இது குறித்து, தி.மு.க., மூத்த தலைவர்கள் சிலர், ஜெகத்ரட்சகனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 'வீட்டிற்குள் வேல் வைத்திருக்கக் கூடாது என்கின்றனர். இதனால், தலைவருக்கு எதுவும் பிரச்னை வருமா' என, அவர்கள் கேட்டுள்ளனர். 'வேலை தண்ணீருக்குள் போட்டு விட்டால், எந்த பிரச்னையும் வராது' என, பதில் அளித்துள்ளார் ஜெகத்ரட்சகன். தேவையில்லாமல் இந்த விவகாரத்தை எழுப்பியதற்காக, ஜெகத்ரட்சகனிடம், சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். ஜெகத்ரட்சகன், நாலாயிர திவ்ய பிரபந்த நூலுக்கு பொழிப்புரை எழுதியவர். பக்தியில் அதிக நாட்டம் உடையவர். தி.மு.க.,வுக்கு, ஹிந்துக்கள் மீது மரியாதை உண்டு என சொல்வதற்காக, ஒரு முறை திருப்பதியிலிருந்து பண்டிதர்களை வரவழைத்து, கருணாநிதி முன், ஸ்லோகங்கள் சொல்ல வைத்தவர். 'கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல், வேல் விவகாரத்தில், இவர் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை' என்கின்றனர்,
ஏமாற்றத்தில் எதிர்க்கட்சிகள்!
நம் அரசியல்வாதிகளுக்கு, எதிலும் ஆதாயம் பார்ப்பது தான் குறிக்கோள். சாவில் கூட ஓட்டு வங்கி தான், இவர்களது இலக்கு. டில்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி விஷயத்தில், ஆதாயம் தேடுவதற்காக காத்திருந்தன எதிர்க்கட்சிகள்.'போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே அடிதடி ஏற்படும்; மரணங்கள் நிகழும். இதை வைத்து அரசியல் செய்யலாம்' என, எதிர்க்கட்சியினர் நினைத்திருந்தனர். டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு படி மேலாக போனார். சண்டையில் காயமடைவோரை அழைத்துச் செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தார். ஆனால், 'துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க வேண்டும்' என, போலீசாருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால், போராட்டத்தில் உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதனால், சுதந்திர போராட்டத்தின் போது நடந்த ஜாலியன்வாலாபாக் போன்ற சம்பவத்தை எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். 'கொடுக்கப்படும் துண்டுச் சீட்டைப் பார்த்து பேசும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, டில்லியில் என்ன நடந்தது என தெரியுமா; அது தெரியாமலே கருத்து சொல்கிறார்' என, கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., வினர். ராஜிவ் பிரதமராக இருந்தபோது, பார்லிமென்ட் நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர். அப்போது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.
வெறுப்பில் காங்., தலைவர்கள்
தமிழக காங்கிரசில் கோஷ்டி மோதல் அனைவரும் அறிந்த ரகசியம். பீட்டர் அல்போன்ஸ் மீது, கட்சி தலைமைக்கு புகார் கொடுத்துள்ளார் கோபண்ணா. இதையடுத்து, பீட்டரும், கோபண்ணா மீது புகார் அளித்துள்ளார். ராகுல், சோனியா என, இருவருக்குமே இந்த புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. 'தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இப்படி புகார்கள் வருகிறதே' என, ராகுல் வெறுப்படைந்து உள்ளார். சோனியாவுக்கும் இது பிடிக்கவில்லை. 'சண்டையை நிறுத்திவிட்டு தேர்தல் வேலைகளைப் பாருங்கள்' என்கிறார் ராகுல்.
தி.மு.க.,வினர். தேர்தலை கவனிக்க உத்தரவு
மேற்கு வங்கத்தில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. பா.ஜ., கடும் சவாலாக இருப்பதால், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும், கட்சி நிர்வாகிகளை தேர்தல் வேலைகளுக்காக முடுக்கி விட்டுள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியுள்ளதால், அதில் பங்கேற்பதை தவிர்க்கும்படியும், மேற்கு வங்கத்திலேயே தங்கியிருந்து தேர்தல் வேலைகளை பார்க்கும்படியும், தன் கட்சி எம்.பி.,க்களுக்கு, மம்தா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், கேரள மாநில எம்.பி.,க்களும், பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE