புதுடில்லி: சுயசார்பு இந்தியா திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் பொருளாதாரம் மீண்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: போதும் இல்லாத சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நோய் தொற்று காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஏழைகள் நலவாழ்வு நிதி உதவி திட்டத்தை பிரதமர் துவக்கினார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். உலகில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி.

\
மேலும் கொரோனா தடுப்பபூசிகள்
கொரோனா காலத்தில் கடினமான சூழலை எதிர்கொள்ள சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்.கொரோனாவுக்கு எதிராக இந்திய மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டு வந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 தடுப்பூசிகள் வர உள்ளது. பொருளாதாரத்தை நிலைநிறுத்த 5 மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டம், சரிவில் இருந்து மீள உதவும். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
சுயசார்பு இந்தியா திட்டம்
சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது. இந்த திட்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருகிறது. பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.27.1 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டம் என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. பழங்காலத்தில் இந்தியா சுயசார்பு பெற்ற நாடாக இருந்தது. சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.