அலகுமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட்டு, சித்ராவும், மித்ராவும், வீடு நோக்கி பல்லடம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
''அக்கா, பல்லடம் - லட்சுமி மில் ஏரியாவுல 'பூங்கா' பேர் கொண்ட ஓட்டலில், ஏ.டி.எம்., மாதிரி, 24 மணி நேரமும் சரக்கு விக்கறாங்களாம். உள்ளூர் போலீசும் பக்கவா 'சப்போர்ட்' பண்றதால, தள்ளுவண்டில வச்சு, சரக்கு விற்பனை சக்கை போடுபோடுதாம்,'' அரட்டையை ஆரம்பித்தாள் மித்ரா.
''அங்க மட்டுமில்ல. ரூரல் ஏரியாவிலுள்ள சில ஓட்டல்களில், அதுவும், அவிநாசி ஏரியாவில், பைபாஸ் ரோட்டிலுள்ள 'தாபா' ஓட்டல்களிலும், சரக்கு துாள் விற்பனையாம். அதிகாரி நடவடிக்கை எடுத்தா பரவாயில்ல. ம்... பார்க்கலாம்,'' சலித்து கொண்டாள் சித்ரா.
''அது சரிங்க்கா, பல்லடம் தாலுகா ஆபீசில், வி.ஏ.ஓ.,கள் மண்டல ஆபீசரை கண்டிச்சு, தர்ணா பண்ணாங்களாமே''
''ஆமான்டி. பட்டா மாறுதல் அப்ளிகேஷன் அனுப்பினா, காரணமே இல்லாம மண்டல அதிகாரி ரிஜெக்ட் பண்றதால, ராத்திரி 9:00 மணிக்கு மேல, போராட்டம் பண்ணாங்க. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறதா, தாசில்தார் உறுதியா சொன்னதால, சமாதானம் ஆனாங்களாம்
''அப்போது, சித்ராவின் மொபைல் போன் அழைக்க, ''யாரு…புஷ்பராஜ் அங்கிளா? என்ன அங்கிள் ஒரு வாரம் லீவுன்னு சொன்னாங்க. உடம்பு சரியில்லையா. வீட்டுக்கு போயிட்டு கூப்பிடறேன்...'' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.
ரோட்டோரம் இருந்த பேக்கரி முன் வண்டியை நிறுத்திய சித்ரா, ''தலைவலிக்குது. காபி குடிச்சுட்டு போலாம்,'' என்றதும், மித்ராவும் பின் தொடர்ந்தாள்.
பேக்கரியில் இருந்த தொழிலாளர்கள் சிலர், ''நல வாரியத்துல இணையறதுக்கே, ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கே'' என, புலம்பியது இருவரின் காதில் விழுந்தது.''அவங்க சொல்றது சரிதான் மித்து. தொழிலாளர் நலவாரியத்துல உறுப்பினரா சேரவும், பெயரை புதுப்பிக்கவும், நிறைய பேரு அந்த ஆபீசுக்கு போறாங்க. ஆனா, தொழிற்சங்க பிரதிநிதிகள் மூலமா வாங்கன்னு,' சொல்லி திருப்பி அனுப்பிடறாங்களாம்,''
''என்னன்னு விசாரிச்சா, நலவாரிய உதவியை வாங்க, அங்குள்ள சில அலுவலர்களை 'ஸ்பெஷலா' கவனிக்கணுமாம். இல்லேன்னா, அப்ளிகேஷனை, கடாசிடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இதுக்கெல்லாம் ஒரே வழி, கலெக்டர் தலைமையிலான குழு, விண்ணப்ப நிலுவையை விசாரிச்சு, நல உதவி வழங்க ஏற்பாடு பண்றது மட்டும் தான்,'' என்றாள் மித்ரா.
''அங்க அப்படின்னா. போக்குவரத்து கழகத்தில, யூனியன்காரங்களோட டாமினேஷன் ஓவரா போயிடுச்சாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''அப்படி என்ன நடந்துச்சுங்க்கா...?''
''மண்டல ஆபீசரு ஒருத்தர், ஆளுங்கட்சி யூனியன் நிர்வாகிகிட்ட நெருக்கமா இருக்காராம். ஆனா, வணிக விவகாரத்த கவனிக்கிற ஒரு ஆபீசரு, கண்டிப்பானவரு. இதனால, அவரை சூலுாருக்கு மாத்திட்டாங்களாம்,''
''யூனியன்காரங்களுக்கு அவ்ளோ பவர் இருக்கா'''
'அப்படியெல்லாம் இல்ல. மண்டல ஆபீசரு, பொறுப்பு அதிகாரிதானாம். அதனாலதான், வளைஞ்சு போறதா பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
பக்கத்து சீட்டில், இருந்தவரின் மொபைல் போன் சிணுங்க, ''யாரு... பொன்னுசாமியா. ஏம்பா, டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம். சரியா வேலை செஞ்ச குமாருக்கும் தேங்க்ஸ் சொல்லிடு,'' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.
''என்னதான் நடந்தாலும், ரிஜிஸ்டர் ஆபீசில் இருக்கறவங்க திருந்தமாட்டாங்க போல,''
''ஏங்க்கா... என்ன நடந்துச்சு?''
''தாரா... ரிஜிஸ்டர் ஆபீசில், கமிஷன் இல்லாம, காரியம் நடக்கறதில்லயாம். அதுவும், புதுசா வந்த லேடி ஸ்டாப் மூலமாத்தான் வசூல் வேட்டை நடக்குதாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், ஆபீசரு ஒருத்தரு, வந்த உடனேயே, எப்டி வசூல் பண்ணனும்ங்கிறத கேட்டு தெரிஞ்சுக்கிட்டு, பட்டையை கிளப்பறாராம்,'' என்றாள் சித்ரா.
''எல்லாம் பணம் படுத்தும் பாடு,'' என புலம்பிய மித்ரா, ''உள்ளேன் அய்யா சொல்லாததால, பலருக்கும் பதவி போயிடும் போல,'' என்றாள்.
''எந்த கட்சியில,'' ஆர்வமாக கேட்டாள் சித்ரா.
''ஆளுங்கட்சி 'பூத்' கமிட்டி கூட்டம், கட்சி ஆபீசில நடந்திருக்கு. 'பதவியில இருக்க நிர்வாகிங்க, கட்டாயம் கூட்டத்துக்கு வரோணும்'ன்னு புதுசா வந்தா நிர்வாகி கண்டிப்பா சொல்லிட்டாராம். பேரை படிக்க சொல்லி, 'அட்டன்டென்ஸ்' வேற எடுத்திருக்காரு,''
''வராதவங்களை நோட் பண்ணி, தலைமைக்கு அனுப்ப போகிறாராம். வாழ்வா... சாவா, எலக் ஷன் என்பதால், 'ஜெய'மான அந்த நிர்வாகி ரொம்ப 'ஸ்ட்ரிக்டா' நடந்துக்கறாராம்,'' என்றாள் மித்ரா.
பேக்கரியில், 'பில் செட்டில்' செய்து, இருவரும் புறப்பட்டனர். ரோட்டோரம், டிராபிக் போலீஸ், வாகன ஓட்டிகளை பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த சித்ரா, ''சிட்டி அதிகாரி காதுக்கு எந்த விஷயம் போனாலும், நடவடிக்கை எடுக்கறதில்லையாம். சிட்டிக்குள்ள சட்ட விரோத செயல் மூலமா 'குளுகுளு' அதிகாரிங்க, என, எல்லாரும் பலத்த வேட்டையாம்,''
''அதுமட்டுமில்லாம, சில ஸ்டேஷனில், சிலர் குறுநில மன்னர்களாகவே மாறிட்டாங்க. இதெல்லாம் தெரிஞ்சும் கூட, 'சிட்டி' அதிகாரி, மவுனமாகவே இருக்காரு. இதனால், பலரும் பயமே இல்லாம, திரும்பத்திரும்ப பல தப்பு செஞ்சு, பண மழையில நனையறாங்களாம்,''
''இதில என்ன கொடுமைன்னா… சிட்டிக்குள்ள நடக்குற சூதாட்டத்தை, கோவையில் இருந்து வந்த ஒற்றர்படை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சாங்க,'' என்றாள் சித்ரா.
''இது வேறயா?'
''ஆமான்டி. ரெண்டு நாளைக்கு முன்னாடி, பல்லடம் பக்கத்துல, ஒரு தோட்டத்தில் பெரியளவில் சூதாட்டம் நடந்திருக்கு.''கோவையில் இருந்து வந்த ஒற்றர்படை போலீஸ், லோக்கல் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி புடிச்சு குடுத்திருக்காங்க. சம்பந்தப்பட்ட கும்பல், ரூரல் ஏரியாவில, வாரத்துக்கு ஒரு முறை சூதாடிட்டு போவாங்களாம். இதை கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நம்ம ஊர் போலீஸ் இருக்குது,''
''அக்கா... இதே மாதிரி ஒரு மேட்டர் சொல்றேன்,''
''சீக்கிரம் சொல்லுடி,''
''நில அபகரிப்பு சம்பந்தமாக புகார் கொடுக்க போன, அங்க இருக்கிற ஆபீசர்ஸ் நடவடிக்கை எடுத்து நிலத்தையெல்லாம் மீட்பது கிடையாது. அதுக்கு பதிலா, புகார் தரப்பு, எதிர் தரப்பிடம் முடிஞ்ச வரைக்கும் 'கட்ட பஞ்சாயத்து' பேசி, 'லகரங்'களை வாரி வாரி குவிச்சுட்டு வராரு,''
''இல்லாட்டி, கம்ப்ளைன்ட்டில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதி எழுதி தரச்சொல்றாரு. இப்படி இவரு, 'சேப்டி'யா இடத்துல, உட்கார்ந்துட்டே, வசூலை அள்ளிக்குவிக்கிறாராம்,'' விளக்கினாள் மித்ரா.
எதிரில், குமரேசன் என்று எழுதிய லாரி ஒன்று அசுர வேகத்தில் சென்றது.''இவ்ளோ, ஸ்பீடா போனா நேரா சொர்க்கத்துக்கு போக வேண்டியதுதான்,'' என்ற சித்ரா, ''அலகுமலை ஜல்லிக்கட்டில் ஒரே மல்லுக்கட்டாம்,'' சொன்னாள்.
''என்ன, நடந்ததுங்க்கா...''
''ஜல்லிக்கட்டில் கலந்துகிட்ட, 784 மாடுகளில், 200 மாடுகளுக்கான 'டோக்கனை' உடுமலை, வி.ஐ.பி.,யே வாங்கிட்டாராம். இதுபோக, கால்நடைத்துறை அதிகாரிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, இப்டி எல்லா கட்சியினரும், 'டோக்கனை' கேட்டதால, ஒரு கட்டத்தில வெறுத்துப்போன, முக்கிய நிர்வாகி, 'நான் ரிசைன் பண்ணிடறேன். 'பிரஸ்ஸர்' தாங்க முடியலைன்னு ஓபன் மீட்டிங்கிலயே புலம்பி தள்ளிட்டாராம்,''
''அடடே...'' என்ற மித்ரா, ''இதேபோல, ஒரு 'டார்ச்சர்' மேட்டர் பல்லடத்தில் நடந்தது,'' என புதிர் போட்டாள்.
''அது யாரு?''
''பல்லடம் யூனியன் சேர்மன், தன்னோட வீட்டுக்காரரு, ரொம்ப 'டார்ச்சர்' பண்றாருன்னு, ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் குடுத்திட்டாங்க,''
''அப்படி என்ன பிரச்னை''
''அக்கா... அவங்க வீட்டுக்காரரு, சென்னையில இருக்காராம். இவங்க, இங்க இருக்காங்க. அடிக்கடி போனில் கூப்பிட்டு, கண்டபடி பேசறாராம். போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க,'' என மித்ரா சொல்லி முடிக்கவும், வண்டியை நிறுத்தினாள் சித்ரா. மித்ரா இறங்கியபடியே, ''பை... பை...'' சொல்லவும், சித்ரா புறப்பட்டாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE