கோவை:கோவை, மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில், காருண்யா நகர் என குறிப்பிட்டிருப்பதை, 'நல்லுார் வயல்' என மாற்றுவதற்கு நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக, ஊராட்சி நிர்வாகிகளிடம், கலெக்டர் ராஜாமணி விசாரணை நடத்தினார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் ஒன்றியம், மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லுார் வயல் கிராமத்தில், மத போதகர் பால் தினகரன் நடத்தும் காருண்யா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 1995க்கு முன்பு வரை, நல்லுார் வயல் என்றே, அப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. முதலில், தபால் நிலையத்தின் பெயரை, காருண்யா நகர் என மாற்றினர். தொடர்ச்சியாக, தொலைபேசி நிலையம், காவல் நிலையத்தின் பெயர்களை படிப்படியாக மாற்றினர். நெடுஞ்சாலைத்துறை போர்டுகளிலும், அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளிலும் காருண்யா நகர் என எழுதப்பட்டது. இதற்கு, அப்பகுதி மக்கள், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'அத்திப்பட்டி' போல், நல்லுார் வயல் கிராமத்தின் பெயரையே, அரசு அலுவலக பதிவேடுகளில் இருந்து புதைக்கும் செயலை தடுக்கவும், கிராமத்தின் பெயரையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்கவும், 'நல்லுார் வயல் பாதுகாப்பு குழு' என்கிற அமைப்பை, கிராம மக்கள் உருவாக்கி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பேரணி நடத்தினர்.நல்லுார் வயல் என்கிற பெயரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

அதிகாரிகள் அழைப்பு
மத்வராயபுரம் ஊராட்சியில், தலைவர் கிட்டுசாமி தலைமையில், ஊராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. துணை தலைவர் வெற்றிவேல், செயலர் தேவி மற்றும், 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவர் ஒருமித்த ஆதரவுடன், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களிலும், 'காருண்யா நகர்' என்ற பெயரை, நல்லுார் வயல் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையறிந்த, தொண்டாமுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டு, 'யாரை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றினீர்கள்' என, கேட்டுள்ளார்.
அதற்கு, 'எங்கள் ஊராட்சியில், எங்கள் மக்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற, யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்' என, தலைவர் கிட்டுசாமி திருப்பிக் கேட்டுள்ளார்.
உடனே, 'தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன், எங்களிடம் சொல்லியிருக்கலாமே' என கூறி விட்டு,'உங்களை, கலெக்டர் சந்திக்க விரும்புகிறார்;நேரில் வாருங்கள்' என,அழைப்பு விடுத்தார்.
ஊராட்சி தலைவர், துணை தலைவர், செயலர் உள்ளிட்டோர், கலெக்டர் ராஜாமணியை சந்திக்க சென்றனர். ஊரக வளர்ச்சி துறை (ஊராட்சி) உதவி இயக்குனர் சீனிவாசன் உடனிருந்தார். அவர்களிடம் இருந்து, தீர்மானம் நிறைவேற்றிய பதிவேடு புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.
அப்போது, 'தீர்மானம் நிறைவேற்றும் முன், கேட்டிருக்கலாமே' என, கலெக்டர் கேட்டுள்ளார். அதற்கு, 'எங்களது கிராமத்தின் பெயர், 'நல்லுார் வயல்' என்றே, அரசிதழில் இருக்கிறது' என கூறி, அதன் நகலை, ஊராட்சி தலைவர் காண்பித்துள்ளார்.
'ஆய்வு செய்து முடிவு'
கலெக்டர் ராஜாமணியிடம் கேட்ட போது, ''யாரிடமும் விசாரணை நடத்தவில்லை; யாரையும் கூப்பிடவில்லை. அங்குள்ள தகவல்களை காட்டுவதற்காக வந்தார்கள். கலெக்டர் என்கிற முறையில் நடவடிக்கை எடுக்க, எந்த முன்மொழிவும் வரவில்லை. சூழ்நிலையை கவனித்து வருகிறேன். சம்பவம் நடந்திருக்கிறது; சரியாக ஆய்வு செய்து, முடிவெடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE