உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எஸ்.மணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அரசியல் கட்சிகளின் தாளத்திற்கேற்ப நடனமாட முன்வராத அதிகாரிகளுக்கு இடமாற்றம், பணி மாற்றம், காத்திருப்பு பட்டியல், கட்டாய ஓய்வு, சஸ்பென்ஷன் போன்ற, 'பரிசு'கள் வழங்குவதை, ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல, 'விசாரணைக் கமிஷன்' என்ற பெயரில், ஒரு மிரட்டல் ஆயுதத்தையும் கையில் எடுக்கத் துவங்கியுள்ளனர்.
சமீபத்தில், விசாரணைக் கமிஷன் என்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பவர், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா.இதுபோன்ற பயங்கரமான ஆயுதங்களால் தாக்கப்படும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைவோர், 'அடியேன் சரணம்' என, அடிபணிவதைத் தவிர, வேறு வழியில்லாமல் தவிப்பர்.ஆனால் சுரப்பா, தமிழக ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு கிஞ்சித்தும் அஞ்சாமல், துணிச்சலோடு எதிர்த்து நின்றார்.
சுரப்பாவின் மடியில் கனம் இல்லை; அதனால் வழியிலும் பயம் இல்லை.அவர், 'கப்பம்' கட்டி, துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் அல்ல; நேரடியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்.சுரப்பா மீது ஆட்சியாளர்கள் தொடுத்த குற்றச்சாட்டே, பல்கலையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களிடம் லஞ்சம் வாங்கினார் மற்றும் அவரின் மகளுக்கு முறைகேடாக பணி உத்தரவு வழங்கினார் என்பது தான்.ஆனால், பல்கலைக் கழக நிதியை, அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர்களின் தேவைக்கு மடை மாற்றிட மறுத்தார் என்பதே, அவர் மீது விசாரணைக் கமிஷன் அமைக்க உண்மையான காரணம்.இதில் வேடிக்கை என்னவென்றால், ஆளுங்கட்சி என்ன செய்தாலும், அதை எதிர்த்து நிற்பது தான், எதிர்க்கட்சி வழக்கம்.

ஆனால் சுரப்பாவிற்கு எதிரான விஷயத்தில், ஆளுங்கட்சியோடு சேர்ந்து, எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும் ஒன்றாக இணைந்து வேலை செய்தது.அரசு அறிவித்த விசாரணைக் கமிஷனின் முதற்கட்ட விசாரணையிலேயே, புகார் கொடுத்தோரின் பெயரும், முகவரியும் போலி என்பது நிரூபணமானது.முதல் பந்திலேயே, தமிழக அரசு, 'க்ளீன் போல்ட்' ஆனது. தற்போது வேறு வழியின்றி, சுரப்பா மீதான விசாரணையைக் கைவிட முடிவு செய்துள்ளது.எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்ற சொலவடை, சுரப்பா விஷயத்தில், அரசியல்வாதிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும்.நீதி எப்போதும் துாங்காது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE