சமீபத்தில் நடந்த அந்த சம்பவங்களை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. இப்படியெல்லாம் கூடவா பெற்றோர் இருப்பர் என்று எண்ணி எண்ணி, மனம் குமுறுகிறது.ஆம்... ஆந்திராவில், சித்துார் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை தான் கூறுகிறேன்.அப்பா கல்லுாரி பேராசிரியர்; அம்மா பள்ளி தாளாளர். இருவரும் சேர்ந்து தங்களுக்கு அதீத சக்தி கிட்டும், அளவு கடந்த செல்வம் வீட்டில் கொட்டும் என்பதற்காக, தாங்கள் பெற்றெடுத்த இரு மகள்களை நரபலி
கொடுத்திருக்கின்றனர்.தகவலறிந்து வந்த போலீசை தடுத்து நிறுத்தி, 'அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்; இப்போது எழுந்து விடுவர்' என்று சொல்லி இருக்கின்றனர்.
தகுந்த தண்டனை
அதை விடக் கொடுமை. வேறு ஒரு பூஜை செய்தால், அவர்கள் மீண்டும் உயிரோடு வருவர் என்று, மந்திரவாதிகள் சொன்னதை நம்பி, அதை அவர்கள் செய்ய துடித்தது தான்.அதற்கு சில நாட்களுக்கு முன் தான், அரைகுறையாக, 'அக்குபிரஷர்' வைத்தியம் படித்த ஒருவர், 'மருந்தில்லா மருத்துவம் பார்க்கப் போகிறேன்' என்று சொல்லி, தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்து, மனைவியையும், வயிற்றில் வளர்ந்த குழந்தையையும், அநியாயமாக கொன்றுள்ளார்.
அந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் இப்படியொரு சம்பவம்.இவர்களை, மெத்த படித்த பைத்தியங்கள் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன சொல்வது... படிப்பறிவும், பட்டறிவும் இவர்களுக்கு பகுத்தறிவை கொடுக்கவில்லையே!இதில், ஆந்திரா சம்பவத்தைப் பொறுத்தவரை, மகள்களை கொன்றவர்களுக்கு போலீசார் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவர்; இரண்டாவதாக சொன்ன, அரைகுறை அக்குபிரஷர் வைத்தியருக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?
அவரின் வைத்தியம் விபரீதமானதால், வெளியே தெரிந்தது. இன்னும் வெளியே தெரியாமல் எத்தனை எத்தனை வைத்தியர்களோ...உண்மையில், மருந்தில்லா மருத்துவம் சாத்தியமா என்று பார்ப்போம். மருந்தில்லா மருத்துவம் என்றவுடன், நம் மக்கள் நினைவிற்கு வருவது இயற்கை வைத்தியம், அக்குபிரஷர், ரெய்க்கி போன்றவை தான்.அலோபதி மருத்துவ முறையை பொறுத்தவரை, மருந்தில்லா மருத்துவமும் ஒரு பகுதியாக உள்ளது. அலோபதி மருத்துவத்தின் முதல் தத்துவமே, 'முடிந்தால் குணப்படுத்து; முடிந்தவரை ஆசுவாசப்படுத்து; முடியாவிட்டால் சமாதானப்படுத்து' என்பது தான்.எனவே, சிகிச்சை பெற வருபவர்கள் சொல்லும் அறிகுறிகளையும், மாற்றங்களையும் கணிக்க வேண்டும்.
தேவையெனில் சோதனை செய்து, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்; அதன் பிறகே, மருந்து, மாத்திரை மூலம் குணப்படுத்த வேண்டும். நம் வாழ்க்கை முறை மாற்றங்கள், நாம் உண்ணும் உணவு, நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி முறைகள், நாம் செய்யக்கூடிய வேலையின் தன்மை, வீட்டிலும், வெளியிலும் உள்ள வேலைப்பளு, மன அழுத்தம் இவை எல்லாவற்றையும் சார்ந்து தான், சிகிச்சை அளிக்க வேண்டும்; அப்படி செய்தால் தான் அது சரிப்படும்.'கவுன்சிலிங்' எனப்படும் ஆலோசனை, மருத்துவத்தின் ஒரு பகுதியே. ஒருவருக்கு நாம் கொடுக்கும் கவுன்சிலிங்கே, 50 சதவீத குணத்தை கொடுத்து விடும்.சில நாட்களுக்கு முன், ஒரு செய்தியை படித்த போது, நெஞ்சம் பதறியது.
'யு டியூப்' எனும் சமூக வலைதள, 'வீடியோ'வைப் பார்த்து, மனைவிக்கு பிரசவம் பார்த்த நபரால், மனைவி, குழந்தை என, இருவருமே இறந்து விட்டனராம். மனைவியை, பரிசோதனைக்கூட எலி போல நினைத்து, இரு உயிர்களை பறித்த அந்த ஆள், எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்க வேண்டும்... படித்து பல ஆண்டுகள் அனுபவபட்ட, பண்பட்ட எங்களைப் போன்ற ஆங்கில மருத்துவர்களுக்கு சொல்லித் தரப்பட்டது என்னவென்றால், 'உங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும் நீங்கள் குணப்படுத்த முயற்சிக்காதீர்கள்' என்பது தான்.நம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை நாம் குணப்படுத்த முற்படும் போது, உணர்ச்சி வசப்படுவதால், பாசத்தால், அன்பால், சில நேரங்களில் நாம் தவறான முடிவுகள் எடுக்கக்கூடும் அல்லது முடிவு எடுக்கும் போது, தடுமாற்றம் உண்டாகும் என்பதால், இவ்வாறு சொல்லப்பட்டது.
புத்திசாலித்தனம்
அப்படி இருக்க, சரியான பயிற்சி இல்லாமல், மனைவியையும், பிறக்கப் போகும் குழந்தையையும் கணவனால் எப்படி காக்க முடியும்...ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி. அந்தப் படத்தின் நாயகன் சாலையில் சென்று கொண்டிருப்பான். திடீரென பலத்த மழை பெய்யும். போக்குவரத்து நெரிசலால், சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டு விடும்.ஒரு கல்லுாரி கட்டடத்திற்குள் சிக்கிக் கொள்ளும் கர்ப்பிணிக்கு, அந்த படத்தின் நாயகனே பிரசவம் பார்ப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சிகள் சுத்த அபத்தம்.
அரைகுறை அக்குபஞ்சர் மருத்துவர் போன்றவர்கள், இதுபோன்ற சினிமா படங்களைப் பார்த்து தான், அதுபோன்ற முடிவுகளை எடுத்தனரோ என்ற அச்சத்தை தருகிறது.பிரசவம் என்பது, சினிமாவில் காண்பிப்பது போல, வயிற்றிலிருக்கும் குழந்தை வெளியே வந்து விழுவது மட்டுமல்ல. அதற்கு முன்னும், பின்னும் நிறைய மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டும்; அப்போது தான், வயிற்றிலிருக்கும் குழந்தை, பத்திரமாக பிறக்கும்.ஆனால், ஆங்கிலப் படங்கள் துவங்கி, எத்தனையோ தமிழ் படங்களில் பிரசவத்தை காதலன் செய்வது போல, கணவன் செய்வது போல காட்டுகின்றனர்.சினிமாவை உண்மை என நம்பும் மக்கள் நிறைந்த நம் நாட்டில், அந்த காட்சிகளும் உண்மை தான் என, எண்ண வைத்துவிடும்.
எனவே, வருங்காலங்களில், பிரசவம் தொடர்பான காட்சிகளை எடுக்கும் போது, கவனமாக எடுங்கள் இயக்குனர்களே. உங்களின் புத்திசாலித்தனத்தை, உயிர்களில் காட்டாதீர்கள்.ஒரு நாட்டில் கர்ப்பிணியர் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை பொறுத்து தான், அந்த நாடு சுகாதாரத்தில், எந்த அளவு உயர்ந்து இருக்கிறது என்பது முடிவு செய்யப்படுகிறது.
எங்களைப் போன்றவர்கள் பல ஆண்டுகளாக போராடி, நம் இந்தியாவை, அந்த பட்டியலில் இப்போது தான் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம். இந்த நேரத்தில் இத்தகைய அறிவிலிகளால், பெற்ற பெயரை இழந்து விடும் அபாயம் உள்ளது.இதற்காக எங்களைப் போன்ற டாக்டர்கள் பட்டபாடு கொஞ்ச, நஞ்சமல்ல. எங்களை நினைத்தாவது, பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
பல்வேறு வகையான மருத்துவ முறைகள், இந்தியாவில் பல காலமாக புழக்கத்தில் உள்ளன. சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் இந்திய மண்ணிலே தோன்றிய மருத்துவ முறைகளாக இருந்தாலும், இன்னும் அதற்கான தகுதியை பெறவில்லை. அக்குபிரஷரும், ஹோமியோபதியும் வெளிநாடுகளில் தோன்றியிருந்தாலும், எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாதது என்பதால், மக்களால் வரவேற்கப்படுகிறது.மேற்கூறிய மருத்துவ முறைகளுக்கு பின் தோன்றியது தான், ஆங்கில மருத்துவம் எனப்படும், 'அலோபதி!' எனினும், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சிகளும், சரியான பயிற்றுவித்தல் முறைகளாலும், உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது.
மேலும், அதன் சட்ட திட்டங்களும், மருந்துகளை எளிமையாக எடுத்துக் கொள்ளும் விதமும், மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றிய வெளிப்படைத் தன்மையும், பரவலாக எளிதாக கிடைக்கக் கூடியதாக இருப்பதால், எல்லா மருத்துவ முறைக்கும், அலோபதி தலைமை தாங்குகிறது.சில நோய்களுக்கு சித்த மருத்துவமும், சில நோய்களுக்கு அக்குபிரஷரும், சில நோய்களுக்கு ஹோமியோபதியும்நன்றாக குணப்படுத்தும். எந்த மருத்துவ முறையுமே, 100 சதவீதம் முழுமையானதல்ல; 100 சதவீதம் குறைபாடு உடையதும் அல்ல.
சிறந்த மருத்துவர்
அலோபதி மருத்துவர் ஆனாலும், மாற்று மருத்துவ முறைகளிலும் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்பதை படிக்க வேண்டும் என, என்னை போன்ற பல மருத்துவர்கள் நினைப்போம். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நோக்காமல், பிற மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து, அதிலுள்ள நல்ல விஷயங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்று நினைப்போம். மருத்துவர் சவுடையாவின் ஹோமியோபதி நுாலை படிக்கும் போது, உண்மையாகவே மனித குலத்திற்கு அவர் ஒரு பெரிய தொண்டு செய்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
அது போலவே, அக்குபிரஷர் பற்றியும் பல அலோபதி டாக்டர்கள் பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஹோமியோபதி மருத்துவ முறையை கண்டறிந்ததே, ஹானிமன் என்ற, ஜெர்மனியை சேர்ந்தஆங்கில மருத்துவர் தான்.ஒரு மருத்துவர், நல்ல அனுபவம் வாய்ந்தவர், நன்றாக படித்தவர் என்ற நிலையை எட்டும் போது, கட்டாயம் அவருக்கு, தன்னால் எது முடியும், எது முடியாது என்ற புரிதல் இருக்கும். அந்த நிலையை எட்டியவரே, ஒரு சிறந்த மருத்துவராக விளங்க முடியும்.
டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா
தொடர்புக்கு: மொபைல்: 80560 87139
இ -மெயில்: doctorjsharma@gmail.com