உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எல்.ஆர்.சுப்பு, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் கூடி விவாதித்து, நல்ல முடிவு எடுத்து செயல்பட, ஆதாரமாய் இருப்பது சட்டசபை. ஆனால் சில ஆண்டுகளாய், சட்டசபை சண்டை சபையாகி, வெளிநடப்பு, புறக்கணிப்பு என, கட்சிகள் தங்கள் நலனுக்காக மோதிக்கொள்ளும் களமாக மாறியுள்ளது.

அங்கு, உருப்படியான விவாதங்கள் நடப்பதில்லை; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சித்துக் கொள்வதே, முக்கிய விவாதமாக உள்ளது. தொகுதி மக்களின் நலனுக்காக செயல்படுவர் என்ற நம்பிக்கையில் தானே, எம்.எல்.ஏ.,க்கள் 234 பேரை, சட்டசபைக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அவர்களோ, சட்டசபையில் தொகுதி பிரச்னையை பேசித் தீர்வு காண்பதில்லை;அதற்கான நேரம் கூட, சபையில் தரப்படுவதில்லை.
சட்டசபைக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பது, தியாகம் அல்ல; கடமை. காரணம்அவர்களுக்கு படியுடன் சேர்த்து, மாதச்சம்பளமாக, ஒரு லட்சத்து, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது; இது தவிர, தங்கும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்ல, இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம், 'கொரோனா' அச்சத்தால், கலைவாணர் அரங்கில்நடத்தப்பட்டது. அங்கு தற்காலிக சட்டசபை அமைக்க, 1.20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் முதல் நாளிலேயே, எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்து, தொடரையே புறக்கணித்து விட்டன. தேர்தல் நேரத்தில் மக்களிடம், 'உங்களுக்குப் பணியாற்ற, எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்' என கும்பிட்டு ஓட்டு வாங்கி, வெற்றி பெறும், எம்.எல்.ஏ., தம் கடமையை, சட்டசபையில் நிறைவேற்றுவதில்லை. இதனால், சம்பளம், கூட்ட ஏற்பாடு என, மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் வீணடிக்கப்படுகிறது.
இதைப் பற்றி, மக்கள் பிரதிநிதிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கம் பற்றியும், அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. காரணம், தேர்தல் வந்துவிட்டால் வாய் ஜாலம், பண வினியோகம் மூலம் மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, ஓட்டு பெற்று விடலாம் என, கட்சிகள் நினைப்பது தான். மக்களே... 'ஓட்டு' எனும் வலிமையான ஆயுதத்தை கையில் வைத்திருக்கும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். நமக்கானபிரதிநிதி சரியாக செயல்படுவாரா என பார்த்து, அவருக்கு ஓட்டளித்து, நாட்டு வளர்ச்சிக்குவழிவகுக்க வேண்டும். மக்கள் வரிப்பணம், மண்ணாவதைத் தடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE