தூசியிலும் காசு பார்க்கும் கூட்டம்... 'ஓசி'யில் வாங்கி, சொத்து சேர்ப்பதே திட்டம்!

Updated : பிப் 09, 2021 | Added : பிப் 08, 2021
Advertisement
சித்ராவின் வீட்டுக்குள் வந்த மித்ரா, சமையலறையில் இருந்தவளை பார்த்து, ''என்னக்கா...இப்டி கதவை திறந்து போட்டுட்டு இருக்கீங்க. ஊரெல்லாம் திருட்டு பயம் அதிகமாகிடுச்சு. உஷாரா இருக்க வேண்டாமா?'' என்றாள்.''திருட்டு ஆசாமிகள பிடிக்கத்தானே, போலீஸ்காரங்க, மாவட்டம் முழுக்க நிறைய இடங்கள்ல புதுசு, புதுசா செக்போஸ்ட் போட்டிருக்காங்க'' என்றாள் சித்ரா.''அட… போங்க அக்கா.
தூசியிலும் காசு பார்க்கும் கூட்டம்... 'ஓசி'யில் வாங்கி, சொத்து சேர்ப்பதே திட்டம்!

சித்ராவின் வீட்டுக்குள் வந்த மித்ரா, சமையலறையில் இருந்தவளை பார்த்து, ''என்னக்கா...இப்டி கதவை திறந்து போட்டுட்டு இருக்கீங்க. ஊரெல்லாம் திருட்டு பயம் அதிகமாகிடுச்சு. உஷாரா இருக்க வேண்டாமா?'' என்றாள்.''திருட்டு ஆசாமிகள பிடிக்கத்தானே, போலீஸ்காரங்க, மாவட்டம் முழுக்க நிறைய இடங்கள்ல புதுசு, புதுசா செக்போஸ்ட் போட்டிருக்காங்க'' என்றாள் சித்ரா.

''அட… போங்க அக்கா. செக்போஸ்ட் போட்டு என்னத்த பண்றது? அவிநாசி, தாராபுரத்தில பல இடத்தில, செக்போஸ்ட்ட கடந்து வர்ற வண்டிகள வரிசையா நிக்க வைச்சு, செக் பண்றோம்ங்ற பேர்ல, செம கலெக் ஷன் பண்றாங்களாம்.

''ஒரு வேளை செக்போஸ்ட் போட்டதே அதுக்குத்தானோ என்னவோ?'' சிரித்த சித்ரா, ''இவங்கள மாதிரியே ரோந்து போலீஸ்காரங்களும் பண்றாங்க,''

''புரியற மாதிரி சொல்லுக்கா...''

''ரோந்து போற போலீஸ்காரங்க பல பேரு, இல்லீகலா சரக்கு விக்கறவங்க, பெட்ரோல், லாட்டரி விக்கறவங்கிட்ட, மாசா மாசம் 'டீல்' பேசி, 'ரேட்' பிக்ஸ் பண்ணிட்டாங்களாம். விஷயம் தெரிஞ்சு பெரிய ஆபீசர்ங்க விளக்கம் கேட்டப்ப, ரொம்ப துாரம் டூவீலர்ல ரோந்து போறோம். பெட்ரோல் செலவ எப்படி ஈடுகட்றதுன்னு கேக்கறாங்களாம்''

''இப்படி இருந்தா சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்காம என்ன பண்ணும்?'' ஆவேசப்பட்டாள் மித்ரா, ''போலீஸ்காரங்க தொந்தரவு தாங்காம, கடையை காலி பண்ண கதை உனக்கு தெரியுமா,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''இது எங்கடி?''

''முருகன் பேரில் ஊர் கொண்ட ஸ்டேஷன் போலீஸ்காரங்க, தங்களோட எல்லைக்குட்பட்ட கடைக்காரங்க கிட்ட, மாசம், அஞ்சாயிரம் ரூவா மாமூல் பிக்ஸ் பண்ணி வசூலிக்கிறாங்களாம். கொடுக்கலைன்னா, குட்கா கேஸ் போட்டுடுவோம்ன்னு மிரட்டலாம். தொல்லை தாங்க முடியாத சிலர், கடையையே குளோஸ் பண்ணிட்டு, வேற பக்கம் போய்ட்டாங்களாம்''

''அடக்கொடுமையே...'' என ஆதங்கப்பட்ட, சித்ரா, ''மாநிலம் முழுக்க போலீஸ்காரங்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்தும், நம்ம மாவட்டத்துல, டிரான்ஸ்பர் கேட்ட, 150 பேருக்கு இனியும், 'ஆர்டர்' தரலையாம். இதனால், அவங்க ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்களாம்'' என்றாள்.

''இவ்ளோ பிரச்னை இருந்தும், பெரிய ஆபீசர்ங்க என்ன செய்யறாங்கன்னு தெரியலையே,'' என்ற மித்ராவிடம், ''

''வா மித்து. மார்க்கெட் வரைக்கும் போய்ட்டு வந்துடலாம்'' என, சித்ரா கூற, இருவரும் வண்டியில் கிளம்பினர்.ரோட்டில், டிராபிக் ஜாம் ஏற்படவே, ''ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். இப்ப கிளியர் ஆகிடும்,'' என, ஒருவர் கூறினார்.

"காங்கயம் ரோட்டிலுள்ள அரசு டிப்போவில் இருக்கற பெரிய ஆபீசர் ஒருத்தர், கூட வேலை செய்றவங்க கிட்ட ரொம்ப கரடுமுரடா நடந்துக்கிறாராம். போன வாரம் டிப்போல தனக்கு கீழ வேலை பார்க்கிற ஒரு சின்ன ஆபீசர பப்ளிக்கா திட்டினதுல்ல அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாராம்,''

''அய்யய்யோ, அப்புறம் என்னாச்சு?''

''அதுக்கப்பறம் பயந்து போய், ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய், அட்மிட் பண்ணாங்களாம். இன்னும் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்குதாம்,''அப்போது, மித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, ''அங்கிள் மார்க்கெட் வரைக்கும் வந்திருக்கேன். வீட்டுக்கு வந்ததும், 'குமாரை' போய்ப்பார்த்து, 'ஏன் இப்டி பண்றீங்கன்னு? கேட்கலாம்'' என பேசி வைத்தாள்.

''டிராபிக்' சரியான நிலையில், மார்க்கெட் சென்ற இருவரும், காய்கறி வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.''போன தடவை மாதிரி, இப்பெல்லாம், மாவட்ட யூனியன் கூட்டம் நடக்கிறது இல்லையாம். கொரோனாவை காட்டி, கவுன்சிலர்களை மட்டும் வைச்சு, சத்தமில்லாம கூட்டத்தை முடிச்சுக்கிறாங்க...''

''2011 - 2016ல், மாநில அளவில, சிறந்த மாவட்டக்குழுன்னு பேர் வாங்கினாங்க; இப்ப, நிலைமை தலைகீழாகிடுச்சு,'' என்றாள் சித்ரா

.''அக்கா... இங்க இப்டின்னா, கோழிப்பண்ணையூரில், ஒவ்வொரு வார்டுலேயும் டெண்டர் விடறப்பவே, கமிஷன் தரலைன்னா கான்ட்ராக்ட் கிடையாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிடறாங்களாம்,''

''அடடே... என்னதான், அவங்க, 'தேன்' போல, 'மொழி' பேசினாலும், கலெக் ஷனில், கரெக்டா இருக்காங்க போல,'' சொன்ன சித்ரா, ''மித்து, அதே ஏரியாவில, 'கரை' கண்ட பஞ்சாயத்துல குப்பைல இருந்தும் கூட காசு கொட்டுதாம்'' என்றாள் சித்ரா.

''அதெப்படிங்க்கா...'' ஆச்சரியமாக கேட்டாள்.''அட, பஞ்சாயத்துல கலெக்ட் பண்ற குப்பைக்கு, மொத்தமா கான்ட்ராக்ட் விட்டா கமிஷன் குறைஞ்சிடும்னு, தனித்தனியா பிரிச்சு வேலை செய்யறாங்க. அதனால, கமிஷன் ஜாஸ்தி கெடைக்குதாம்,'' என்றாள் சித்ரா.

''எப்படி சுரண்டறதுன்னு, இவங்ககிட்டதான், பாடம் படிக்கோணும்,'' சொன்ன மித்ரா, ''அக்கா... மாற்றுத்திறனாளி ஒருத்தர் ரோடை கிராஸ் பண்ண சிரமப்படறாரு. வண்டியை நிறுத்துங்க, போயிட்டு வந்துடறேன்,'' என்றாள்.

சொன்ன மாதிரியே அவருக்கு உதவி செய்ததை பாராட்டிய சித்ரா, ''இவங்களை போன்றவர்களுக்கு பப்ளிக் நல்லாவே சப்போர்ட் பண்றாங்க. ஆனா, மாற்றுத்திறனாளி துறை ஆபீசர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை,'' என, ஆவேசப்பட்டாள்.

''என்னக்கா... சொல்றீங்க?'' அதிர்ச்சியாக கேட்டாள் மித்ரா.

''நம்ம மாவட்டத்தில, மாற்றுத்திறனாளிகளுக்கு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி வீல் சேர்களை, தகுதியுள்ள பயனாளிகளுக்கு கூட, நாலாயிரம் ரூபாய் வரை கமிஷன் வாங்கிட்டுத்தான் தர்றாங்களாம். மத்திய அரசின் அடையாள அட்டை வந்தும் கூட, அதை தராம இழுத்தடிக்கிறாங்களாம்,''

''இதெல்லாம் டூ மச்சா இருக்கு. இந்த விசயம் கலெக்டர் கவனத்துக்கு போகுதா, இல்லையான்னே தெரியலையே,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.

சாலையின் மையத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்.

''சூரிய கட்சில நடக்கிற உட்கட்சி சண்டை, சென்னை வரைக்கும் கேட்குதாமே,''''ஆமான்டி. காங்கயத்தில், சூரியக்கட்சி நிர்வாகி ஒருத்தர், காளை கண்காட்சி நடத்த திட்ட மிட்டு, இடம் பார்த்து வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. ஆனா, அதே கட்சியை சேர்ந்த 'மாஜி' மந்திரி, கண்காட்சி நடத்தவிடாம 'டிஸ்டர்ப்' செஞ்சிருக்காரு. இதனால, வேற இடத்தை செலக்ட் பண்ணிட்டாங்க. இது, தலைமை வரைக்கும் போயிருக்குதாம்,''

''அக்கா... அதே கட்சியில, பல்லடத்தில நடந்த கூத்தை கேளுங்க. மாவட்ட செயலாளரை வேட்பாளராக்கிய, நிர்வாகி ஒருத்தர், லட்சம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிப்பார்னு, போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாராம். இதைப்பார்த்த ஒரு கோஷ்டி, தலைமைக்கு புகார் செஞ்சிட்டாங்களாம்,''

''கல்யாணத்துக்கு இப்பதான் பொண்ணே பாக்கறாங்க. அதுக்குள்ள பிள்ளைக்கு பேர் வச்ச கதையால்ல இருக்குது. தேர்தல் வர்றதுக்குள்ள இன்னும் என்ெனன்ன நடக்குமோ...'' சொன்ன சித்ரா, ''முதலிபாளையம் 'தாட்கோ' வளாகத்துல இலவச வீட்டுமனை வாங்கித்தர்றதா ஆசை காட்டி, நுாத்துக்கணக்கானவங்களை கூட்டிட்டு வந்து, சமூக நீதி காப்பதா சொல்லி, ஒரு குரூப் முற்றுகை போராட்டம் நடத்தினாங்க...''

''அங்க கம்பெனிதான் கட்டோணும்னு, ஆபீசர்கள் நீ...ண்ட, விளக்கம் தந்தததாலே, மக்கள் கலைஞ்சு போனாங்களாம்,'' என விளக்கினாள்.அப்போது வீட்டுமனை விற்பனைக்கு போர்டு கண்ணில் படவே, ''வீட்டுமனை அங்கீகார விவகாரத்துல, கமிஷன் அள்றாங்ளாம்க்கா,'' என, மித்ரா கேட்டாள்.

''நானுந்தான், கேள்விப்பட்டேன் மித்து. இந்த விஷயத்தில், இந்த மாசம் கடைசிவரை, அவகாசம் இருக்கு. இதைப்பயன்படுத்தி சில ஊராட்சிகளில், 50 ஆயிரம் ரூபா வரை கமிஷன் 'கறாரா' கேட்கிறாங்களாம்,'' என்றாள்.

''காற்றுள்ள போதே துாற்றிக் கொள்'ங்கிற பழமொழியை 'பாலோ' பண்றாங்கன்னு நெனக்கிறேன்...'' என்றுமித்ரா சொன்னதும், ''உண்மை தான்டி,'' என சிரித்த சித்ரா,எக்ஸலேட்டரை முறுக்கினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X