பேரூர்:கோவை அருகே, பழங்குடியினருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, மதமாற்ற முயற்சிப்பதாக, 'காருண்யா' மீது புகார் எழுந்துள்ளது.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், மத பிரசார நிகழ்ச்சிகளை நடத்துபவர், மத போதகர் பால் தினகரன். அவர், கோவை, நல்லுார்வயல் கிராமத்தில், காருண்யா நிகர்நிலை பல்கலை, பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்துகிறார்.
இவருக்கு சொந்தமான காருண்யா 'சீஷா' நடமாடும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வாயிலாக, பழங்குடியினருக்கு பரிசு பொருட்களை கொடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.ஆலாந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் கூறியதாவது:
கடந்த, டிச., மாதம் பழங்குடியினர் கிராமங்களில், காருண்யா நிறுவனத்தின் சீஷா நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ்சை வெள்ளப்பதியில் நிறுத்தி விசாரித்தோம். பழங்குடியினருக்கு வழங்குவதற்கான பலவிதமான பொருட்கள் இருந்தன.
வனத்துறை ஊழியர்கள் விசாரித்துவிட்டு, அனுமதியில்லாமல் வந்துள்ளதாக தெரிவித்தனர். பழங்குடியினர் வீட்டில், காருண்யா சீஷா ஆம்புலன்சில் கொண்டு வந்த, புத்தாடைகள், பெட்ஷீட், குழந்தைகளுக்கான பரிசு பொருட்கள், பேனர் இருந்தன; இது, பழங்குடியினரை மத மாற்ற செய்யும் முயற்சி.இது குறித்து, வனத்துறை, காவல் துறை, மத்வராயபுரம் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். சாதாரண வாகனங்களில் பொருட்களை எடுத்து வந்திருந்தால் எந்த கேள்வியும் இல்லை. ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மத மாற்றும் முயற்சியை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பசுமை வீடுகளில் பால் தினகரன் பெயர்
கடந்த ஆண்டு, நல்லுார்வயல்பதி பழங்குடியினர் கிராமத்தில், அரசு சார்பில், ஏழு பசுமை வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் கட்டுவதற்கு, 'காருண்யா சீஷா' சார்பில், ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்ட அரசின் பசுமை வீடுகளில், 'பால் தினகரன் சீஷா காருண்யா சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் உதவியோடு
தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு' என்ற பெயர் பலகையை பொருத்தியுள்ளனர். அதை, பால் தினகரனின் பிறந்தநாளில் திறக்க முடிவு செய்தனர். நல்லுார் வயல் மக்களின் எதிர்ப்பு காரணமாக, பெயர் பலகை சுவரில் இருந்து அகற்றப்பட்டது.
காருண்யா நகர் பெயர் நீக்க பழங்குடியின மக்கள் மனு
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட அரசு ஆவணங்களில் காருண்யா நகர் என்ற பெயரை நீக்கி, நல்லுார்வயல் என மாற்றக் கோரி, பழங்குடி மக்கள் நேற்று கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர்.கலெக்டர் ராஜாமணியை சந்தித்து, அவர்கள் அளித்த மனு:
கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சி, நல்லுார் வயல் கிராமத்தில், பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 1986ல் காருண்யா கல்லுாரி, நல்லுார்வயலில் செயல்பட துவங்கியது.
அப்போது அந்த இடம் மட்டும், காருண்யா நகர் என்ற ஒரு தெருவாக இருந்தது. தற்போதும், அரசு இதழ்களில் அவ்வாறே உள்ளது.
காருண்யா நிர்வாகம் அதிகார பலத்தால், சிறிது சிறிதாக எங்கள் ஊரின் அடையாளமான பாரம்பரிய பெயரை மாற்றத் துவங்கினர். 1992ல், மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் நிலையம், காருண்யா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நல்லுார்வயல் என்ற கிராமத்தின் பெயரையே காருண்யா நகர் என மாற்றினர். கிராம மக்களின் ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை அனைத்திலும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கி, பி.எஸ்.என்.எல்., போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தற்போது அமைய உள்ள மின்சார வாரியத்துக்கும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமத்தின் அடையாளத்தை இழந்துள்ளோம். பாரம்பரிய பெயரான நல்லுார்வயல் என்பதை அனைத்து இடங்களிலும் குறிப்பிடுவதுடன், அனைத்து அரசு அடையாள அட்டைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.