வேலுார் :''விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து, அரசாணை வெளியிட்டுள்ளோம். இன்னும், 15 நாட்களில், கடன் ரத்துக்கான ரசீது வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட கையனுாரில், நேற்று பிரசாரம் செய்து, முதல்வர் பேசியதாவது: அ.தி.மு.க., அரசு, மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம். பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் வழங்கினோம். தி.மு.க., எப்போதும் மக்களிடம் எடுத்து தான் பழக்கம். அ.தி.மு.க., ஆட்சியில், ஏழை குடும்பங்கள் கல்வி பெற ஏற்பாடு செய்தோம். தி.மு.க., ஆட்சியில் ஏழைகளுக்கு, எந்த நன்மையும் கிடைக்கவில்லை.இந்த ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என, ஸ்டாலின் பொய் பரப்புரை செய்கிறார். அவர், சட்டசபைக்கு வருவதும் கிடையாது. நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது.
பத்திரிகைகளில் எதற்கு, பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார், என ஸ்டாலின் கேட்கிறார். முதல்வர் என்ன கிழித்தார் என, நாகரிகமில்லாமல் பேசுகிறார். அதனால், அவர் தெரிந்து கொள்ளவும், மக்களும், எதிர்க்கட்சிகளும் தெரிந்து கொள்ளவும்தான், விளம்பரம் கொடுக்கிறோம்.
என்ன கிழித்தாய் என்கிறாய், என்ன கிழித்தோம் என்பதை தான் சொல்கிறோம். மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்பதை கூற, நேரடி விவாதத்துக்கு அழைத்தால், ஸ்டாலின் வருவதில்லை.ஸ்டாலின் பெட்டி வைத்து, மனுக்களை பெறுகிறார். ஆட்சிக்கு வந்ததும் தீர்ப்போம் என்கிறார். அவர், ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, மக்களின் குறைகளை தீர்க்கப் போவதுமில்லை. தேர்தலின்போது, கொடுத்த வாக்குறுதிகளை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி வருகிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து, அரசாணை வெளியிட்டுள்ளோம். இன்னும், 15 நாட்களில், கடன் ரத்துக்கான ரசீது வழங்கப்படும். மீண்டும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE