தந்தை துவக்கிய கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய், தன் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், சந்திப்பு, ஆலோசனை என, பரபரப்பாக இயங்குவதால், அவர் கட்சி துவக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு அடுத்து தமிழ் திரையுலகில் முன்னணியில் இருப்பவர் விஜய். தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், பல லட்சம் ரசிகர்களை வைத்துள்ளார். சமீபத்தில் இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் கட்சி துவக்க திட்டமிட்டார். இதற்கு, விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அக்கட்சியை துவக்கும் முன்பாகவே கிடப்பில் போட்டார். அதேவேளையில், தன் பெயரில் கட்சியை துவக்க திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில், விஜய் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. அதில், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டனர். சமீபத்தில், தன் பனையூர் அலுவலகத்தில், தினமும் ரசிகர்களை சந்திக்கும் விஜய், அவர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இரண்டு முறை நிர்வாகிகளை நியமித்த விஜய், அதில் பொறுப்பாளர், மாவட்ட தலைவர், இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி மகளிர் மற்றும் தொண்டரணி என, அரசியல் கட்சி போலவே நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
கடந்த ஞாயிறன்று பனையூருக்கு வந்த விஜயை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால், அவர் காரில் இருந்து இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் அறிவிப்பு நெருங்கும் சூழலில், விஜய் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
-- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE