தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், குறைந்தது இரண்டு எம்.எல்.ஏ.,க்களை பெற்றாக வேண்டிய கட்டாயம், தே.மு.தி.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. இல்லையேல் கட்சி அங்கீகாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை, மாநில கட்சிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே, தேர்தல் கமிஷனில், அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக உள்ளன. மற்ற கட்சிகள் அனைத்தும், பதிவு பெற்ற கட்சிகளாக மட்டுமே உள்ளன.கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டு, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்றதுடன், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அடுத்து, 2009 லோக்சபா தேர்தலில், 10.08 சதவீதம் ஓட்டுகளை பெற்றது.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஓட்டு சதவீதம், 7.88 ஆக சரிந்தது. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 5.19 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 2.19 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலுக்கு பின், எந்த தேர்தலிலும், ஒரு சீட்டு கூட பெறவில்லை.
எனினும், ஏற்கனவே பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், அக்கட்சி தேர்தல் கமிஷனில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே உள்ளது.ஆனால், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அக்கட்சி, 8 சதவீத ஓட்டுகளைப் பெற வேண்டும் அல்லது, 6 சதவீத ஓட்டுகளும், 2 எம்.எல்.ஏ.,க்களையும் பெற வேண்டும். இல்லையேல், அக்கட்சி தனது அங்கீகாரத்தை இழப்பதுடன், முரசு சின்னத்தையும் இழக்க நேரிடும்.ஏற்கனவே, பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள், இதுபோன்று அங்கீகாரத்தை இழந்துள்ளன. இந்த கட்சிகள், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற, குறைந்தது, 8 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.
-- டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE