சென்னை : மக்கள் நீதி மையம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 'இனி எல்லாமே கமல் மயம் தான்' என்று அறிவிக்கும் வகையில் அவர் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது.
கமலின் மக்கள் நீதி மையம் கட்சி 2018 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இரண்டே மாதத்தில் லோக்சபா தேர்தலை சந்தித்த கமல் ஓரளவு ஓட்டுகளை பெற்றார். தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் முதல் முறையாக பொதுக்குழு கூட்டத்தை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடத்தினார்.மண்டபத்திற்கு 10:15க்கு வந்த கமல் 11:00 மணியளவில் பொதுக்குழு அரங்கிற்கு வந்தார். பொதுக்குழுவை தொடர்ந்து பிரசார திட்டம் நான்காம் ஆண்டு துவக்க விழா ஏற்பாடுகள் பிப். 21ல் நடக்க உள்ள மாநாட்டு ஏற்பாடுகள் பயிற்சி வகுப்புகள் குறித்த ஆலோசனை நடந்தது. பொதுக்குழுவில் கட்சியின் நிரந்தர தலைவராக கமல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுக்குழுவில் 'தமிழகத்தை சீரமைக்க மாணவர்கள் தாமாக முன் வரவேண்டும்; கிராம சபையை நடத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்; விவசாயத்தை பாதிக்கும் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது' என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம்
ஒரு ஓட்டுக்கு 2000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தர திராவிட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். அரசின் கடன் விபரங்களை தேர்தலுக்கு முன் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சு ஒன்று; செயல் வேறு?
* 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கமல் பொதுக்குழுவையும் திராவிட கட்சிகளை போலவே நடத்தி உள்ளார்
* சாலை முழுக்க பேனர்கள் போஸ்டர் கொடி தோரணம் தாரை தப்பட்டை என சகல அம்சங்களுடன் பொதுக்குழு நடத்தப்பட்டது
* வானகரத்தில் சாலையின் இருபுறமும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பேனர்கள் கிழிந்து பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடைஞ்சலாக இருந்தது. இது கமலின் பிரசார தலைப்புக்கே மாறாக இருந்ததை காண முடிந்தது.
'தி.மு.க. வேண்டவே வேண்டாம்'
பொதுக்குழு கூட்டத்தில் கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க. - அ.தி.மு.க. போன்றவை பெரிய கட்சிகள் என்பதெல்லாம் வெறும் வார்த்தை தான். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாற்று கட்சியாக நம்மை பார்க்கின்றனர். இந்த நேரத்தில் தான் நாம் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அடுத்து அ.தி.மு.க. வரவே கூடாது என்றால் தி.மு.க. எப்போதுமே வரக்கூடாது. அவர்கள் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திராவிட கட்சிகளுக்கு இல்லை. நம் கட்சியில் யார் வேண்டுமானாலும் எந்த சாமியை வேண்டுமானாலும் கும்பிடுங்கள்; நான் தடுக்க மாட்டேன். என் பக்தி உங்கள் மீது தான்.இவ்வாறு கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE