மும்பை : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருக்கு, 5 லட்சம் ரூபாய் பிணையில், ஜாமின் வழங்கப்பட்டது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், 'வீடியோகான்' நிறுவனத்திற்கு, 300 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு, 64 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றுத் தந்ததாக, அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் துாத், உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த, ஜன., 30ல், 'குற்றஞ்சாட்டப்பட்டோர் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும்' என, சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நேற்று, சந்தா கோச்சார், சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி, ஏ.ஏ.நந்த்கோன்கர் தலைமையிலான அமர்வு முன் ஆஜரானார்.
அப்போது, சந்தா கோச்சார், தன் பதவியை பயன்படுத்தி ஆதாயம் பெற்றதற்கு ஆதாரங்கள் உள்ளதாக, நீதிபதி தெரிவித்தார். உடனே, சந்தா கோச்சாருக்கு ஜாமின் கோரி, அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, 'சந்தா கோச்சார், 5 லட்சம் ரூபாய் பிணைப் பத்திரம் வழங்கி, ஜாமினில் செல்லலாம்' என, அமர்வு உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE