கடலூர்: திமுக தான் விவசாயிகளுக்கு என்றைக்கும் பக்கபலமாக உள்ளது என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: இன்று தமிழகத்தில் முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவர் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். செயல்பட்டு கொண்டிருக்கிறார் என சொல்ல முடியாது. அவர் இன்று, தேர்தல் நெருங்க நெருங்க புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டுள்ளார். முன்பு நான் என்ன சொல்கிறேனோ அதை மறுத்தார். ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டது. நான் என்ன சொல்கிறேனோ அதை நிறைவேற்றிவருகிறார். ஆனால், நான் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறேனோ அதை ஸ்டாலின் முன்கூட்டியே சொல்லி விடுகிறார் என்று அவர் சொல்கிறார். அப்படியென்றால், நீங்கள் அரசை வழி நடத்தாதீர்கள். என்னிடம் விட்டு செல்லுங்கள். இது தான்நான் சொல்வது. நான் சொல்வதை தான் பழனிசாமி செய்கிறார். ஒரு படத்தில் ரஜினிகாந்த், ‛ஆண்டவன் சொல்றான், இந்த அருணாச்சலம் செய்றான்' என கூறுவார். அதைபோல் இப்போது, ‛ இந்த ஸ்டாலின் சொல்கிறார், பழனிசாமி செய்கிறார்'. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு என்றைக்கும் பக்கபலமாக உள்ளது திமுக தான். இன்றும் 3 வேளாண் சட்டங்களை பார்லிமென்டில் கொண்டு வந்த போது அதை எதிர்த்து ஓட்டு போட்டது திமுகதான். இன்றைக்கு அதை எதிர்த்து பேசி கொண்டிருப்பது திமுக. பச்சை துண்டு போட்டால், விவசாயியா? பச்சை துரோகிதான் இன்றைக்கு இருக்கும் முதல்வர் பழனிசாமி. விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர். திமுக ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. அப்போதெல்லாம் மக்களுக்கு என்ன தேவை, மக்களின் கோரிக்கைகள் என்ன தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை ஏற்படுத்துபவை எவை என்பது எல்லாம் யோசித்து முடிவுகள் எடுத்தோம். அதை நிறைவேற்றி கொடுத்தோம்.

ஆனால், இன்றைய ஆட்சி மக்களை மறந்த ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. மக்களை தண்டிக்கும் ஆட்சி. அதிமுக ஆட்சியை மக்கள் தண்டித்தாக வேண்டும். அதற்கான காலமும், சூழலும் நெருங்கி கொண்டுள்ளது.ஸ்டாலினுக்கு உழைப்பை பற்றி பழனிசாமி கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் நான் இல்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE