நம் நாட்டில், யாருக்கு தான் தியாகி பட்டம் கொடுப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்காண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர், மறைந்த ஜெ.,வின் உதவியாளராக இருந்த சசிகலா. அவர் விடுதலையாகி வந்தவுடன், அவருக்கு, 'தியாகி' பட்டம் கொடுத்து, அலங்கார அணிவகுப்பு நடத்தியுள்ளார், அ.ம.மு.க., கட்சி தலைவரும், அந்த, 'தியாகி'யின் அக்கா மகனுமான தினகரன். ஜெ., இருந்தவரை, தினகரன் யார் என்றே மக்களுக்கு தெரியாது. அ.தி.மு.க.,விலிருந்து அவரை நீக்கி வைத்திருந்தார்.
முக்கியத்துவம்
சசிகலாவையும், ஜெ., தன் உதவியாளராக தான் வைத்திருந்தாரே தவிர, கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு எந்த பங்களிப்பும் வழங்கவில்லை; எந்த அதிகாரமும் தரவில்லை.
ஜெ., இருக்கும் வரை, சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள், இளவரசி, தினகரன் போன்றோர், இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். வளர்ப்பு மகன் என, சில காலத்திற்கு அடையாளம் காட்டப்பட்ட சுதாகரன் என்பவரையும், விரைவிலேயே ஓரம் கட்டி தான் வைத்திருந்தார். கடைசி வரை, அரசியல் வாரிசு என்று யாரையும் அவர் அடையாளம் காட்டவில்லை.ஆட்சி, அதிகாரத்தை பொறுத்தவரை, தனக்கு அடுத்தபடியாக, பன்னீர் செல்வத்திற்கே அதிக முக்கியத்துவம் தந்தார் என்பது எல்லாரும் அறிந்ததே.
எனவே, தனக்கு பின் முதல்வர் பொறுப்பை வகிக்க கூடியவர், பன்னீர்செல்வம் என்பதை, அவர் சொல்லாமல் சொல்லி வைத்துள்ளார். ஜெ.,வின் எதிர்பாராத மறைவிற்கு பின், அவரின் விருப்பப்படியே, ஓ.பி.எஸ்.,சை கட்சியினர் முதல்வராக்கினர்; ஆனால், அது, சசிக்கு பிடிக்கவில்லை; தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்ற காரணத்திற்காக, அவரது அதிகாரத்தை பறிக்க முற்பட்டார் சசி.கட்சியிலோ, ஆட்சியிலோ எவ்வித அதிகாரமும் இல்லாத சசிக்கு, அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் அடிபணிந்து, நடுங்கியது ஏன் என்று இதுவரை தெரியவில்லை.
ஜெ.,யை எம்.ஜி.ஆர்., அடையாளம் காட்டி, கட்சியில் கொள்கை பரப்பு செயலர் ஆக்கியது போல், சசிகலாவை, ஜெ., 'எனக்கு பின் இவர் தான்' என்று ஒருநாளும் அறிவிக்கவில்லை.
அவர் நினைத்திருந்தால், எப்போதோ அறிவித்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, தவறு செய்த வேலைக்காரிக்கு தண்டனை கொடுப்பது போல, பல முறை தண்டனைகள் தான்
கொடுத்துள்ளார்.தன் வீட்டிற்கே வரக் கூடாது என, சசிக்கு பல முறை, ஜெ., தடை போட்டுள்ளார்.
இந்த உண்மை தெரிந்தும், அ.தி.மு.க.,வினர் சிலர், சசியை, 'சின்னம்மா' என்றும், 'தியாகத் தலைவி' என்றும் கூறி, தலையில் துாக்கி வைத்து கொண்டாடினர்; இப்போதும் சிலர் கொண்டாடுகின்றனர். அது ஏன் என்பது தெரியவில்லை.
ஜெ., இறந்ததும், கட்சியையும், ஆட்சியையும் நானே நடத்துவேன் என்று கூறி, ஜெ., போலவே தன்னை மாற்றிக் கொண்டு, பந்தாவாக வலம் வந்த போது, அப்போதே அவரின் செயலை கண்டிக்காமல், அவர் காலில், அமைச்சர்கள் பலர் விழுந்தனர்.ஓ.பி.எஸ்.,சை கட்டாயப்படுத்தி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசியின் சதிக்கு, சில அமைச்சர்களும், ஆதரவு கரம் நீட்டினர்.
சசியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அவர்களிடமிருந்து பிரிந்து, வெளியே வந்து, தன் மனக்குமுறலை, ஜெ., சமாதியில் தியானம் மூலம் வெளிப்படுத்தினார், ஓ.பி.எஸ்., இந்த நேரத்தில், வாராது வந்த மாமணி போல, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி, சசிகலா சிறை செல்ல நேர்ந்தது; அ.தி.மு.க., ஆட்சி தப்பி பிழைத்தது. தினகரனால் பிளவுபட நேர்ந்த,
அ.தி.மு.க.,வையும் சாதுர்யமாக சமாளித்தார், முதல்வர், இ.பி.எஸ்., அதுவரை, இ.பி.எஸ்., என்ற ஒருவர், தமிழக சட்டசபையில் இருக்கிறார் என்பதே, மக்களுக்கு தெரியாமல் தான் இருந்தார்.
ஓ.பி.எஸ்.,சை இணைத்துக் கொள்ளாவிடில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் சிரமம்
என்பதை உணர்ந்தார்.'தனியாக வந்த, ஓ.பி.எஸ்., அசுர பலத்துடன் எதிர்க்கட்சியாக இருக்கும், தி.மு.க.,வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்துவிட்டால் என்ன செய்வது' என்று நினைத்து, ஓ.பி.எஸ்.,சுக்கு துணை முதல்வர் பதவியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொடுத்தார். அவருடன் வெளியே வந்த மற்றவர்களுக்கும் பதவி கொடுத்து, ஓ.பி.எஸ்.,சை மீண்டும் ஆட்சியில் இணைய வைத்தார்.
உத்தரவாதம்
பொதுக்குழுவை கூட்டி, கட்சியின் பொதுச்செயலர் பதவியை ஒழித்தார்; அதற்கு பதிலாக, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினார். ஓ.பி.எஸ்., நிபந்தனைப்படி, சசிகலாவை, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கினார்; துணை பொதுச் செயலராக இருந்த தினகரனையும் நீக்கினார். அனைத்து, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஆதரவுடன் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நிர்வகிக்க துவங்கினார், இ.பி.எஸ்., தமிழக நிர்வாகத்தில் கவனம் செலுத்தினார். அனைத்து அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளையும்
அரவணைத்து சென்றார்.
ஜெ.,யின் நிர்வாகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பதைபதைப்புடன் எப்போதும் இருப்பர்; காரணம், அடிக்கடி அமைச்சர்களை மாற்றியபடியே இருப்பார். அவர் ஆட்சியில், அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் கிடையாது. ஒரு சில அமைச்சர்களை தவிர, பெரும்பாலான அமைச்சர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் நிறைவடையாது. இதனால், பணியில் தொய்வு ஏற்பட்டது; அவர்கள் பார்க்கும் துறையில் குளறுபடிகள் உண்டாயின.
ஆனால், இ.பி.எஸ்., கடந்த நான்காண்டுகளில் எந்த அமைச்சரையும் மாற்றவில்லை. அவரால், ஜெ., போல் கடுமையாக நடந்து கொள்ளவும் முடியாது.எல்லாரையும் தட்டிக் கொடுத்தே வேலை வாங்குவதால், அனைவரையும் அனுசரித்துப் போவதால், துளி கூட பந்தா இல்லாமல் செயல்படுவதால், இ.பி.எஸ்.,சை அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஆதரிக்க துவங்கினர்.
முதல்வர் இ.பி.எஸ்., சின், நான்கு ஆண்டு கால ஆட்சி சிறப்பாகவே இருக்கிறது. குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஏரி, குளங்களை துார்வாரி, கரைகளை செப்பனிட்டு, நீர் ஆதாரத்தை பெருக்க வழிவகை செய்தார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஆதாரத்தை கேட்டு பெற்றது; முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது; முடிவு பெறாமல் பாதியில் நின்ற மேம்பாலங்களை விரைவாக முடித்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். குறிப்பாக, கொரோனாவை திறமையாக கையாண்டது என, இ.பி.எஸ்.,சின் சாதனைகளை அடுக்கியபடியே இருக்கலாம்.
கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில், ஜெ.,க்கு அடுத்தபடியாக, இ.பி.எஸ்., திறமையுடன் செயல்படுகிறார். கொரோனா சமயத்தில் கூட, சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். புயல், மழை வெள்ளப் பகுதிகளை பார்க்க, வேட்டியை மடித்துக்கட்டி, களத்தில் இறங்கி விடுகிறார்; தேவையான உதவிகளை வழங்குகிறார். பத்திரிகையாளர்களுக்கும், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளுக்கும் முகம் சுளிக்காமல், புன்னகையுடன் பதில் அளிக்கிறார். இப்படி, இ.பி.எஸ்., அரசு, மக்களிடம் நல்ல பெயரையே எடுத்துள்ளது.
அதனால் தான், தினகரன் சூழ்ச்சி எடுபடவில்லை. தினகரனையும், தி.மு.க,வையும் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும்.தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின், கடந்த, நான்கு ஆண்டு களாக தான், குடும்ப அரசியலோ, வாரிசு அரசியலோ இல்லாத ஆட்சி அமைந்துள்ளது. சினிமா பிரபலங்கள் இல்லாத, சினிமா பின்னணி இல்லாத சாதாரண, எளிமையான ஆட்சி அமைந்துள்ளது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், தனி மனித சுதந்திரத்திற்கு கடிவாளம் போடாத ஆட்சி அமைந்துள்ளது; நிர்வாகமும் சிறப்பாகவே உள்ளது.
எனினும், மது விலக்கை அமல் செய்யாதது; கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாதது; ரவுடிகளின் அட்டகாசம் பெருகியது போன்ற சில குறைகள் காணப்பட்டாலும், பொதுவாக பார்க்கையில், நடப்பு அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்கிக் காட்டினார் ஜெ., அவருக்கு பின், இ.பி.எஸ்., ஆட்சியிலும், மின் வெட்டு இல்லாமல், தொடர்ந்து தமிழகம், மின் மிகை மாநிலமாகவே இருந்து வருகிறது.
தக்க பாடம் புகட்டுவர்
தி.மு.க., ஆட்சியில் கடுமையான மின்வெட்டு காரணமாக, தமிழகத்தில் எவ்வளவோ தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன; எத்தனையோ சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்டன; நிறைய பேருக்கு வேலை பறிபோனது; மின்சாரமின்றி எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டன; கொள்ளை குற்றங்கள் அதிகளவில் அரங்கேறின; எத்தனையோ மாணவர்களின் படிப்பு பாழாயிற்று. அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. நான்காண்டுகளுக்கு முன், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு தாமதமாகி, சசிகலா கையிலும், தினகரன் கையிலும் ஆட்சி, அதிகாரம் கிடைத்திருந்தால், தமிழகம் என்ன கதியாகி இருக்கும் என்பதை, நினைத்து பார்க்கவே முடியவில்லை.
சிறைக்கு ஒருவர் போய் வந்தாலே, தியாகி ஆகி விட முடியாது. அதுவும் குற்ற வழக்குகளில் சிறை சென்று திரும்பியவர்கள், தண்டனை காலத்திற்கு பிறகும் குற்ற வாளிகள் தான். வேண்டு மென்றால், 'முன்னாள் குற்றவாளி' என்று போட்டுக் கொள்ளலாம்.
நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்ற தியாகிகள், ஆங்கிலேயர்களின் ஆட்சியில், சிறைச்சாலையில் கல்லுடைத்தனர்; களி தின்றனர்; சவுக்கடி பட்டனர். அவர்களில் சிலர் எங்கோ ஓர் மூலையில் இருக்கின்றனர்; அவர்களுக்கோ, வாரிசுகளுக்கோ எந்த அடையாளமும் கிடையாது. ஆனால், முறைகேடாக சொத்து சேர்த்தவர்களும், ஊழல் புரிந்து சிறை சென்றவர்களும், குறைவான நாட்களே சிறையில் இருந்து விட்டு, 'தியாகி' பட்டத்துடன் வெளி வருகின்றனர்.ஆங்கிலேயர் காலம் போன்று, சிறையில் கல் உடைப்பது, களி தின்பது போன்ற கடுமை இப்போதில்லை.எத்தகைய கொடூரமான குற்றம் புரிந்து சிறை சென்றாலும், சுதந்திர இந்தியாவில் அவர்களுக்கு, சூடான பிரியாணி தான் போடப்படுகிறது; அவர்கள் விரும்பும் உணவு வகைகள், பணம் கொடுத்தால், வெளியிலிருந்து வரவழைத்து கொடுக்கப்படுகிறது.
செல்வாக்குள்ள அரசியல் கிரிமினல்களுக்கு, சிறையில், 'எல்லா' வசதியும் செய்து தரப்படுகிறது.எந்த அரசியல்வாதியும் சிறைக்கு சென்றால் கஷ்டப்படுவதில்லை; சுகபோகமாகவே இருந்து விட்டு வருகின்றனர். பணபலம் உள்ள வர்களுக்கு, சிறையில் தனி கவனிப்பு உண்டு. முன்பு போல் சிறைக்கு சென்று விட்டு, யாரும் கன்னம் ஒட்டிப் போய், உடல் மெலிந்து போய் வருவதில்லை; நல்ல திடகாத்திரமாகவே வெளியில் வருகின்றனர். இவர்களுக்கெல்லாம், தியாகி பட்டம் கொடுத்து, ஆரவாரமாக வரவேற்பது முறையல்ல.
இதற்கு முன், தி.மு.க., ஆட்சியின் போது, சிறைக்கு சென்று வந்த, தி.மு.க.,வின் தற்போதைய மகளிரணி செயலர் கனிமொழியை, 'திகார் சென்ற தியாகியே வருக' என, பதாகைகள் தாங்கி வரவேற்றனர்; இப்போது சசிகலாவை அதுபோல வரவேற்கின்றனர்.எல்லா கூத்துக்களையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், வேல் பிடித்து வெளி வேஷம் போடுபவர்களுக்கும், விரைவில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!
வ.ப.நாராயணன்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: மொபைல்: 95510 13773