மயிலாடுதுறை: பிரதமர் மோடியிடம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒரு செங்கல் கூட வைக்காதது ஏன்? என முதல்வர் பழனிசாமியால் கேட்க முடியுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் நாடகத்தினால் முதல்வர் ஆக்கப்பட்டவர் பழனிசாமி. அவருக்கு இது அதிர்ஷ்ட பரிசு, லாட்டரி சீட்டு போல. பழனிசாமி, தன் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை வீணடித்துவிட்டார். தனது பதவி மூலம் தமிழகத்திற்கு குண்டூசி அளவு கூட நன்மை செய்யவில்லை. தேர்வுக்கு முந்தைய நாள் மாணவர்கள் படிப்பது போல, தேர்தலுக்கு முன்பு நாட்டுக்கு நல்லது செய்வது போல் நடித்து கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அவரது நடிப்பு தமிழக மக்களுக்கு தெரியும்.

தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுநாள் வரை ஒரு செங்கல் கூட வைக்காதது ஏன்? என்ற இந்த ஒரு கேள்வியை மட்டும் முதல்வர் பழனிசாமியால் மோடியிடமோ, பா.ஜ.,விடமோ கேட்க முடியுமா? நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், ஏழுபேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம், காவிரி ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையில் இணைத்து காவிரி உரிமையை மூடிவைத்து விட்டு தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் குறித்து மத்திய அரசிடம் பழனிசாமியால் கேள்வி கேட்க முடியுமா?.
தைரியம் இல்லாத முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் கொத்தடிமைகள். அவர்களால் எந்த ஒரு நன்மையும் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவர்கள் மீது அமலாகத்துறை, சிபிஐ விசாரணை நடைபெறும். என் மீது நீங்கள் வச்ச நம்பிக்கையை கருணாநிதி மீது ஆணையாக காப்பாற்றுவேன். உங்கள் கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்துள்ளீர்கள். ஆட்சி அமைந்த 100 நாட்களில் அதற்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE