சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்துவிட்டார். ஏற்கனவே பரபரப்பாக உள்ள தேர்தல் களம், மேலும் சூடு பிடித்துள்ளது. 'சசிகலா மற்றும் தினகரனை, அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டோம்' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறி வருகிறார். ஆனால், திரை மறைவில் பல விஷயங்கள் நடந்து வருகின்றன.துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேறொரு திட்டத்துடன் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. 'சசிகலா, தினகரனைச் சேர்த்தால், கட்சி வலிமையாக இருக்கும். தி.மு.க.,வை எதிர்க்க, இது அவசியம்' என, சொல்கிறாராம்.இது மட்டுமல்லாமல், இருவரையும் கட்சியில் மீண்டும் சேர்க்க, ஒரு சமாதான திட்டத்தையும் அவர் கூறியுள்ளார். இதற்கு, தினகரனும், சசிகலாவும் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தினகரனை கடுமையாக பொதுக் கூட்டங்களில் விமர்சித்து வருகிறார், இ.பி.எஸ்., இது, துணை முதல்வருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர், மனக் கசப்பில் உள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, பா.ஜ., மற்றொரு வேலையையும் செய்து வருகிறது. அ.தி.மு.க., மற்றும் சசிகலா, தினகரன் இடையே தகவல் பரிமாற்றங்களை செய்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தில் தொழிற்சாலை வைத்துள்ளார். இவர் வாயிலாக, முதல்வருக்கு தகவல் தரப்படுகிறதாம். மற்றொரு பக்கம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நெருக்கம். இதற்கு காரணம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டம். இவர் மூலமாகவும், பா.ஜ., தரப்பிலிருந்து இணைப்பு தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. அரசியல்வாதிகள் மூலம் இந்த விஷயம் நடந்தால், 'மீடியா'வுக்கு தெரிந்துவிடும் என்பதால், 'இப்படி ரகசியமாக நடக்கட்டும்' என, அமித் ஷா உத்தரவிட்டு உள்ளாராம்.
கோஷ்டி கானம்!
அரசியல் கட்சிகளில் கோஷ்டிகள் இருப்பது சகஜம். காங்கிரசில் தான் இந்த கோஷ்டிகள் அதிகம். அ.தி.மு.க.,வில், இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., என இரண்டு கோஷ்டிகள் இயங்கி வருகின்றன. இந்த கோஷ்டி கானம், டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். டில்லியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், தன் கருத்துக்களை பிரதமரிடம் தெரிவிக்கவும், தம்பிதுரையை எம்.பி.,யாக்கி உள்ளார், இ.பி.எஸ்., தம்பிதுரை, எப்போது வேண்டுமானாலும் நேரடியாக பிரதமரையோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவையோ சந்தித்து பேச முடியும். லோக்சபா துணை சபாநாயகராக பணியாற்றியதால், அவருக்கு இந்த மரியாதை உள்ளது. இவர், பிரதமரையோ அல்லது அமித் ஷாவையோ சந்தித்தால், உடனடியாக அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் இருவர், பரபரப்பாகி விடுகின்றனர்; அவர்களும், பிரதமரையும், அமித் ஷாவையும் சந்திக்க முயற்சிக்கின்றனர். தம்பிதுரை என்ன பேசினார் என தெரிந்து கொள்வதில், இந்த இரண்டு பேரும் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள், துணை முதல்வர் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.
காங்கிரசுக்கு 15 தான்!
விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை துவங்கி விட்டன. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என, இரண்டு திராவிடக் கட்சிகளுமே கூறவில்லை. 'காங்கிரசுக்கு, 20 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கும்' என, கூறப்படுகிறது. ஆனால், டில்லி காங்கிரசில் வேறொரு விஷயம் சொல்லப்படுகிறது. 'காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும்' என, தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டு உள்ளதாம். ஒரு ராஜ்யசபா, 'சீட்' தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். மிகவும் குறைவான தொகுதிகளை காங்., ஏற்குமா என, கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ராகுல் தேறுவாரா?
தமிழகத்துடன் சேர்த்து, கேரள சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன், காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது. ராகுல், வயநாடு தொகுதியின் எம்.பி.,யாக உள்ளதால், கேரளாவில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதை கவுரவ பிரச்னையாக கருதுகிறார்.இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், அது, ராகுலுக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், கேரளாவில் காங்கிரஸ் நிலைமை சரியில்லை. சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. வழக்கம் போல ரமேஷ் சென்னிதலா ஒரு பக்கம், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்னொரு பக்கம் என, காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாகச் செயல்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE