மயிலாடுதுறை: ''தமிழகத்தை 5 லட்சம்கோடி ரூபாய் கடனாளியாக்கியது தான், அ.தி.மு.க.,அரசின் சாதனை,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் நடந்த, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:சசிகலா சிறைக்கு சென்றதால்,
பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால், லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்தது போல் பழனிசாமி., முதல்வர் ஆனார்.
தேர்வுக்கு முதல்நாள் படிக்கிற மாணவன் போன்று, தேர்தல் தேதி நெருங்கியவுடன், மக்களுக்கு நன்மை செய்வதுபோல் நடித்துக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க., அரசு கூச்சம்இல்லாமல்
தவறுகள் செய்கிறது. இதனால், தமிழகத்தை, 5 லட்சம் கோடி ரூபாய் கடனாளியாக்கி,
50 ஆண்டுகள் பின்னுக்குதள்ளியது தான் அ.தி.மு.க., அரசின் சாதனை.தேர்தலுக்காக, 'ஷோ' காட்ட, பிரதமர் மோடி சென்னைக்கு வந்துள்ளார்.
அவரிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையாதது பற்றியும், நீட் தேர்வு விலக்கும், ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு மதிக்காதது பற்றியும் கேள்வி கேட்க, முதல்வருக்கு தைரியம் உள்ளதா? மத்திய அரசு,
தமிழகத்தை கொத்தடிமையாக நினைக்கிறது. கொத்தடிமை அ.தி.மு.க., அரசால், தமிழகத்தில் எந்த நன்மையும் செய்ய முடியாது. தி.மு.க., மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, நான் நிச்சயம் காப்பாற்றுவேன்.இவ்வாறு, அவர்பேசினார்.
பிரதமருக்கு கேள்வி
நாகை அடுத்த பி.ஆர்.புரத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது:சென்னையில் நடந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம்
ஆகியோரின் கைகளை துாக்கி, 'போஸ்' கொடுத்துள்ளார். இரண்டு கைகளும் ஊழல் கை தான். பிரதமர், ஊழல் கறை படிந்த கைகளை உயர்த்தி காண்பித்துள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது, இவர்கள் செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பிரதமர் ஒப்புக் கொள்கிறாரா அல்லது நான் சொல்வதைத்தான் இவர்கள் செய்கின்றனர் என்று சொல்கிறாரா என்பது தான், நான் கேட்கும் கேள்வி.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE