ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ.,, ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய்பிரகாஷ் தலால். இவரிடம், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான டில்லி போராட்டத்தில், விவசாயிகள் உயிரிழப்பது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அவரது பதில் வருமாறு: இந்தியர்களின் சராசரி இறப்பு வயது என்னவென்று தெரியாதா? ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் ஒரு லட்சம் முதல், இரண்டு லட்சம் விவசாயிகள் இயற்கை மரணம் அடைகின்றனர்.

அதன்படி, போராட்டத்தில் இறந்த விவசாயிகள், இங்கு வராமல் வீட்டில் இருந்தாலும், மரணம் அடைந்திருப்பர். இங்கு ஒருவர் மாரடைப்பால் இறந்தார் எனில், மற்றொருவர் நோயால் இறக்கிறார். வீட்டில் இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். 'விபத்தில் பலியானவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் நீங்கள், ஏன் விவசாயிகளுக்கு தெரிவிக்கவில்லை' என்ற கேள்விக்கு, 'இவர்கள் விபத்தில் இறக்கவில்லை; தங்கள் விருப்பத்தின் பேரில் இறந்துள்ளனர்' என்றார்.
பரபரப்பு
இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹரியானா அமைச்சரின் கருத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்து, தன் கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள அமைச்சர் ஜெய்பிரகாஷ் தலால், ''நான் தெரிவிக்க விரும்பிய செய்தியின் உள்ளடக்கம் மாற்றப்பட்டு, வேறு வகையாக வெளியிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE