புதுக்கோட்டை: வெற்றிநடைப் போடும் தமிழகம் என்று முதல்வர் பழனிசாமி விளம்பரம் செய்வதாக கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், இது வெற்றிநடை அல்ல, வெற்றுநடைப் போடும் தமிழகம் என விமர்சித்துள்ளார். மேலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம் என்றும் அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பேசியதாவது: 10 ஆண்டுகளாக தமிழகத்தை பாழாக்கி விட்டனர். வெற்றிநடைப் போடும் தமிழகம் என விளம்பரம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி. இது வெற்றிநடை அல்ல, வெற்றுநடை. இது வளமான ஆட்சி தான். ஆனால் மக்களுக்கு அல்ல, அதிமுக அமைச்சர்களுக்கு மட்டுமே வளமான ஆட்சி. மற்றவர்களுக்கு தாழ்ந்த ஆட்சி தான். அனைத்து துறைகளிலும் ஊழல் வந்துவிட்டது. ரூ.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வைத்துள்ளனர்.

தமிழக மக்களின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாக முதல்வர் கூறியது இமாலயப் பொய். அதிமுக தேர்தல் அறிக்கையில் 2வது விவசாய புரட்சி திட்டம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குதல், விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்போம் என அறிவித்தீர்களே நிறைவேற்றிவிட்டீர்களா? இப்படி அவர்களின் பொய் வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் பொய் சொல்கிறார். வாய்க்கு வந்ததை பேசுவது, ஆளுக்கு தகுந்த மாதிரி நடிப்பது தான் அவரது வாடிக்கை.

ஆனால் நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அப்படி செய்யவில்லை என்றால் என்னிடம் நேரடியாக கேட்கலாம். நான் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்தநாள், கோரிக்கை மனுக்கள் அடங்கிய புகார் மனு பெட்டி திறக்கப்படும். திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும். பிரச்னைகளை சட்டரீதியாக தீர்க்க தனியாக துறை உருவாக்கப்படும். அதன்மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். முடியாவிட்டால், நீங்கள் இதிலுள்ள பதிவு எண் கொண்ட அட்டையுடன் நேரடியாக முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE