ஓ.ஏ., வேலைக்கு ஏழு லட்சம்... 'ஓசி'யில் வயிறு வளர்க்க லஞ்சம்

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | |
Advertisement
ஓய்வெடுத்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், கடை வீதிக்கு கிளம்பினர் சித்ராவும், மித்ராவும்.முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், அப்படியே இருக்க அதனை பார்த்த, மித்ரா, ''போன வாரம், சி.எம்., பிரசாரம் செய்தார் அல்லவா? இதுல என்ன கூத்துன்னா, அவிநாசிக்கு, சி.எம்., வந்தப்ப தான், கனிமொழியும் அதே அன்னைக்கு வந்தாங்க. சி.எம்., கூட்டத்துக்கு வந்த பல பேரு, தி.மு.க., கிராம
 ஓ.ஏ., வேலைக்கு ஏழு லட்சம்... 'ஓசி'யில் வயிறு வளர்க்க லஞ்சம்

ஓய்வெடுத்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், கடை வீதிக்கு கிளம்பினர் சித்ராவும், மித்ராவும்.

முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், அப்படியே இருக்க அதனை பார்த்த, மித்ரா, ''போன வாரம், சி.எம்., பிரசாரம் செய்தார் அல்லவா? இதுல என்ன கூத்துன்னா, அவிநாசிக்கு, சி.எம்., வந்தப்ப தான், கனிமொழியும் அதே அன்னைக்கு வந்தாங்க. சி.எம்., கூட்டத்துக்கு வந்த பல பேரு, தி.மு.க., கிராம சபைக்கும் போயி, வருமானத்த சரி பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.

''கனிமொழி வந்தப்ப, நெருப்பெரிச்சலில், திருநங்கையரை சந்திச்சாங்க. முன்னமே, எழுதி கொடுத்த மாதிரி தான் பேசணும்னு கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க; அதுக்கு, அவங்க மாட்டேன்னு சொல்லிட்டு, ரெண்டு பேர் மட்டும் தான் பேசியிருக்காங்க,''

''இதைகேட்டு 'அவ்வளவு தானான்னு' 'அப்செட்' ஆன கனிமொழி, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, அடுத்த பாயின்டில் நடந்த கிராம சபா கூட்டத்தில், பெண்கள் கூட்டத்தை பார்த்து குஷியாயிட்டாங்களாம். மொத நாளே, பெண்களுக்கு புடவை கொடுத்து, கூட்டத்துக்கு வரவைச்சதா ஒரு பேச்சு ஓடுது,'' விளக்கினாள் மித்ரா.

''உண்மைதான்டி. முன்ன மாதிரியில்லே. ஏதாவது கெடைக்கமான்னு, கட்சிக்காரங்ககிட்ட, மக்கள் கேள்வி கேட்கமாற்றாங்க. அதனாலதான் குடுக்கிறோம்னு இவங்க சொல்றாங்க. மொத்தத்தில், ஜனநாயகம், 'பணநாயகம்' ஆயிடுச்சு,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.

கலெக்டர் அலுவலகத்தை கடந்து சென்ற போது, ஒரு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர். ''இப்பெல்லாம், ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் நடத்துறாங்க. ஆனா, கள நிலவரத்தை கணிக்க முடியாம ஒற்றர் படையினர் திணறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''விவரமா சொல்லுங்க...''

''சில நாட்களுக்கு முன்னாடி கலெக்டர் ஆபீசில், மனு கொடுக்கும் போராட்டத்துக்கு நிறைய பேரு வருவாங்கனு கணக்கு சொன்னாங்களாம். இதனால, 200க்கும் மேற்பட்ட போலீசுக்கு டியூட்டி போட்டுட்டாங்க,''

''ஆனா, மனு கொடுக்க வந்தவங்களை விட, போலீஸ்காரங்க தான் அதிகமாக இருந்தாங்களாம். எத்தனை பேரு வருவாங்கனு கூட, கணிக்க முடியாத அளவுக்கு ஒற்றர் படை பலவீனமாகி போச்சேன்னு, போலீஸ்காரங்களே புலம்பறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இப்படித்தான். தென்னம்பாளையம் மார்க்கெட்டில மூட்டை துாக்கறவங்ககிட்ட, 'உங்க மூலமா தான், கஞ்சா, அபின் எல்லாம் சப்ளை ஆகுது; ஆதார் கார்டு, பான் கார்டு கொண்டு வாங்கன்னு, போலீஸ்காரங்க கேட்டிருக்காங்க,''

''கடுப்பான சிலர், திருப்பூருக்குள்ள கிலோ கணக்கில பதுக்கி விக்கறவங்களை விட்டுட்டு, சம்மந்தமே இல்லாம எங்க கிட்ட வந்து உங்க வீரத்த காட்டறீங்களே சொன்னதால, கம்முனு விட்டுட்டாங்க...'' என்றாள் மித்ரா.

ரோட்டோரம் இருந்த பாஸ்ட் புட் கடையை ஒட்டியிருந்த இளநீர் கடை அருகே ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

ஆளுக்கொன்று வாங்கி, பருக துவங்கினர்.''உணவு பாதுகாப்பு துறையில், சின்ன ஆபீசரின் தலையீடு ரொம்ப அதிகமாம். பெரிய ஆபீசர் எந்த இடத்துக்கு இன்ஸ்பெக்ஷன் போனாலும், அவரும் கூடவே போறாராம். கடைக்காரங்க கிட்ட ரேட் பேசி, டீலிங் முடிச்சு தர்றது தான் அவரோடு முக்கிய வேலையாம். இதனால, மத்தவங்க டென்ஷனில் இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

அப்போது, அருகில் இருந்தவரின் மொபைல் போன் அழைக்க, ''யாரு… விஜயராஜாவா? உங்க மேல நெறைய கம்ப்ளையன்ட் வருது. பாத்துக்கோங்க,'' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.

இதமான காற்று வீசவே, மரத்தின் நிழலில் இருந்த சிமென்ட் இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.

''மெஷின்ல அபராதம் விதிக்காம, ரசீதில் அபராதம் விதிச்சு நல்லா கல்லா கட்றாங்க,''

''எதப்பத்தி சொல்றடி,''''வடக்கு பகுதியில, போக்குவரத்து விதிமீறுவோருக்கு 'இ-சலான்' மெஷினில் 'பைன்' போடாம, கையில் எழுதி ரசீது கொடுத்து அனுப்பறாங்களாம். ஆனா, சில ரசீதை மட்டும் கணக்கு காட்டிட்டு, மற்ற ரசீதுக்கான தொகையை தங்களோட பாக்கெட்டில் போட்டுக்கறாங்களாம்,''

''இத கேள்விப்பட்ட தெற்கு டிராபிக் போலீசும், தங்களோட அதிகாரிகிட்ட, 'எங்களுக்கும் ரசீது போட அனுமதி கொடுங்கனு,' கேட்டு நச்சரிக்கவே, அவரு 'நோ' சொல்லீட்டாராம்,''''அப்ப வடக்கு வாழுது, தெற்கு தேயுது'ன்னு சொல்லு,'' என சிரித்த சித்ரா,

''இதே மாதிரி பல போலீஸ் ஸ்டேஷனில், இல்லீகலா சரக்கு விக்கற ஆட்கள, 'ஸ்டேஷனுக்கு' வர சொல்லாமலேயே, 'டேபிள் சி.எஸ்.ஆர்.,' போட்டு கேஸ் முடிக்கறாங்களாம். அப்படியே 'சரக்கு' பாட்டில் பிடிச்சாலும், நாலஞ்சு மட்டும், எப்.ஐ.ஆரில், கணக்கு காண்பிச்சுட்டு, மத்த பாட்டில்கல, இல்லீகல் சரக்கு விக்கிறவங்க கிட்டயே வித்துடறாங்களாம்,'' கூடுதல் தகவல் சொன்னாள்.

''அப்படியா…இது புதுசால்ல இருக்கு'' ஆச்சரியப்பட்டாள் மித்ரா.''இல்லடி, இது ரொம்ப பழசு தான்டி. அவிநாசிக்கு பக்கத்தில தெக்கலுாரில், 'இல்லீகலா' சரக்கு விற்பது கனஜோரா நடக்குது. போலீஸ் சுத்தமா, கண்டுக்கறதில்லை. சரக்கு விக்கிறவங்க யாருன்னு, பெரிய ஆபீசர்க்கே தெரிஞ்சும் கூட, நடவடிக்கை மட்டும் நஹியாம்,''

''அப்போ, 'மாமூல்' வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கலைன்னு சொல்லுங்க,'' என்ற மித்ரா, ''அக்கா, மதுரை ஆக்ஸிடென்ட் மேட்டர் என்னாச்சுங்க?''

''ரூரல் ஸ்டேஷனை சேர்ந்த 'ஸ்பெஷல் டீம்' ஒண்ணு, திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரை பிடிச்சுட்டு வரும் போது, மதுரைக்கிட்ட கார் கவிழ்ந்திருச்சு. இந்த விஷயம், பெரிய பூகம்பத்தை கிளப்பிடுச்சு,''

''பெரிய அதிகாரியிடம் விளக்கம் கேட்டு சென்னையிலிருந்து நோட்டீஸ் அனுப்பிட்டாங்களாம். ஆனாலும், இதில் சிக்கிய ஸ்டேஷன் அதிகாரியை, 'குளுகுளு' ஆபீசர் காப்பத்திட்டாராம். இருந்தாலும், 'ட்ரீட்மென்ட்டில் உள்ளவர்களுக்கு காசு செலவு பண்ண, அந்த ஆபீசருக்கு மனசு வரலையாம்,'' சித்ரா விளக்கினாள்.

அதேநேரத்தில், மித்ராவின் மொபைல் போன், 'எம் பேரு மீனாகுமாரி...' என 'கந்தசாமி' படத்தின் பாடல் ஒலித்தது. சில வினாடிகள் பேசி விட்டு, போனை அணைத்து வைத்தாள்.

''கடன் தள்ளுபடி அறிவிப்பால, ஆளுங்கட்சிக்காரங்க ஏக குஷியில் இருக்காங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''ஆமாங்க்கா, குஷியில்லாம இருக்குமா?''

''ஆனா, சில சங்கத்துல இருக்க தலைவர்கள், தங்கள் குடும்பத்தில இருக்றவங்க பேர்ல, போன மாசம் தான் கடன் கொடுத்திருக்காங்க. தள்ளுபடி பட்டியல்ல அவங்க பேர சேத்துட்டாங்க. சிலர், தங்களுக்கு வேண்டாதவங்க தள்ளுபடிக்கே வழியில்லாம பண்ணிட்டாங்களாம்,''

''உதாரணமா சொல்லோணும்னா, 'மாணிக்க' பேர் கொண்ட சங்க தலைவரு, தன்னோட மகன் பேர்லே கடன் வாங்கி, தள்ளுபடி பண்ணிக்கிட்டாராம்,''

''ஆளுங்கட்சின்னா, இத கூட செய்யலேன்னு எப்படி?'' சொன்ன மித்ரா, ''ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல ஓ.ஏ., வேலைக்கு, 16 'போஸ்ட்டிங்' இருக்கு, எம்.எல்.ஏ.,களுக்கு 'உள் ஒதுக்கீடு' இருக்கும்னு நினைச்சு, மூணு லட்சம் ரூபாய் வரைக்கும் 'ரேட் பிக்ஸ்' பண்ணி, 'அட்வான்ஸ் புக்கிங்' வேற செஞ்சிருக்காங்க,''

''ஆனா, அதுக்கும் முன்னாடியே, தாலுகா ஆபீசுல தற்காலிகமாக வேல பார்த்துட்டு இருக்றவங்க, மந்திரிகளை 'பார்த்து' வேலை வாங்க 'மூவ்' பண்றாங்களாம்,'' என்றாள்.

''இதுக்கு முன்னாடி, ரேஷன் கடை 'சேல்ஸ் மேன்' வேலைக்கே, மூணு லட்சம் பலர் கொடுத்தும், வேலை கெடைக்கலையாம். நேர்காணல் முடிஞ்சும்கூட, எந்த அறிவிப்பும் வராததால, எலக்ஷன் வர்ற நிலையில, கொடுத்த பணம் 'கோவிந்தா'ன்னு பலரோட புலம்பல் கேட்க ஆரம்பிச்சிருக்கு,''

''உண்மைதாங்க்கா. எங்க பாத்தாலும் பணம் தான், பிரதானம்னு ஆயிடுச்சு. இங்க பாருங்க, காரணம்பேட்டைல புதிய கல்குவாரி பத்தி, மக்கள் கிட்ட கருத்து கேட்கிற வகையில, தனியார் மண்டபத்துல, கூட்டம் அரேன்ஜ் பண்ணாங்க,''

''ஆனா, கூட்டம் தொடர்பா மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லையாம். காசு பாக்கத்தான் ரகசிய கூட்டம் வச்சிருக்காங்கன்னு, விவசாயிகள், கலெக்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. இதனால, கலெக்டரும் தேதி குறிப்பிடாம கூட்டத்தை ஒத்தி வைச்சிட்டாராம்,'' என மித்ரா கூறி முடித்ததும், ''மக்களுக்கு ஏதாவது செய்யணும்னா, வரவர அதிகாரிகளுக்கு வேப்பங்காயாட்டம் கசக்குது போல. ஓ.கே., மித்து, போலாம் வாடி,'' என வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X