ஸ்டாலின் தான் வரப்போறாரு... : என்ன பிரச்னை வரப்போகுதோ!| Dinamalar

ஸ்டாலின் தான் வரப்போறாரு... : என்ன பிரச்னை வரப்போகுதோ!

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | |
நகர்வலம் சென்றிருந்த சித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததும், 'அப்பாடா...' என்றபடி, மின் விசிறியை சுழல விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள்.''என்னக்கா, இலவச திருமண நிகழ்ச்சிக்கு போயிருந்தீங்களே, எப்படியிருந்துச்சு,'' என, துளைக்க ஆரம்பித்தாள் மித்ரா.''அமைச்சர் வேலுமணி ஏற்பாடு எப்படியிருக்கும்னு தெரியாதா, என்ன! தடபுடலா நடத்துனாரு. துணை முதல்வர் ஓ.பி.எஸ்., முந்தாநேத்தே
 ஸ்டாலின் தான் வரப்போறாரு... : என்ன  பிரச்னை  வரப்போகுதோ!

நகர்வலம் சென்றிருந்த சித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததும், 'அப்பாடா...' என்றபடி, மின் விசிறியை சுழல விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள்.

''என்னக்கா, இலவச திருமண நிகழ்ச்சிக்கு போயிருந்தீங்களே, எப்படியிருந்துச்சு,'' என, துளைக்க ஆரம்பித்தாள் மித்ரா.

''அமைச்சர் வேலுமணி ஏற்பாடு எப்படியிருக்கும்னு தெரியாதா, என்ன! தடபுடலா நடத்துனாரு. துணை முதல்வர் ஓ.பி.எஸ்., முந்தாநேத்தே நம்மூருக்கு வந்துட்டாரு. இருந்தாலும், முதல்வர் வரும் வரை விழாவுக்கு வரலை. ஓ.பி.எஸ்., இன்னும் வரலைன்னு சொன்னதும், இ.பி.எஸ்., அமைச்சர்களோடு, அரங்கிற்குள் சென்று, ஓய்வறையில் காத்திருந்தார். 15 நிமிடம் தாமதமாக வந்த ஓ.பி.எஸ்.,சை, வேலுமணி வரவேற்று, உள்ளூர் நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்,''

''ஓ... அப்படியா, சங்கதி,'' என்ற மித்ரா, ''பொடி வச்சு பேசுனதா சொன்னாங்களே,''

''ஆமா, மித்து! விடாக்கொண்டன்; கொடாக்கொண்டான்ன்னு சொல்வாங்களே; அதுமாதிரி ேபசிக்கிட்டாங்க. ஓ.பி.எஸ்., பேசுறபோது, 'விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை' என, பஞ்ச் பேசி, உரையை முடித்தார்.

இ.பி.எஸ்., மைக் பிடிச்சதும், 'விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்; விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், உயர்ந்த இடத்துக்கு வரலாம்; எல்லா வளங்களும் கிடைக்கும்'னு பேசினாரு,''

''சீர் வரிசை பொருட்களை பார்த்து, சி.எம்., அசந்துட்டாராமே,''

''ஆமாப்பா, விழா முடிஞ்சு திரும்பி போறப்ப, ஒரு பாத்திரத்தை எடுத்து தட்டிப் பார்த்தாரு,'

'''அக்கா, திருமணத்துக்கு தேவையான எல்லா பொருட்களையும், அமைச்சர் வேலுமணி மனைவிதான், பர்ச்சேஸ் பண்ணுனாங்களாம். கட்டில் மீது ஏறி நின்று, வெயிட் தாங்குதா, நெளியுதான்னு தரத்தை சோதிச்சு பார்த்தாங்களாம். இதே மாதிரி, ஒவ்வொரு பொருளையும் செலக்ட் செஞ்சிருக்காங்க,''

''சீர் வரிசையில், சில்வர் பாத்திரங்களோடு, பூரி கட்டையும் இருந்துச்சு தெரியுமா,''

''அதெல்லாம் இருக்கட்டும்; தொகுதி கேட்டு, கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்குதாமே,'' என, 'ரூட்'டை மாற்றினாள் மித்ரா.

''ஆமாப்பா, கோவை தெற்கு தொகுதியை கேட்டு, பா.ஜ., தரப்புல நச்சரிக்கிறாங்க. சூலுாரை தே.மு.தி.க.,காரங்க கேட்குறாங்களாம். வால்பாறையை த.மா.கா., கேட்குதாம். நிர்வாகிகள் மட்டத்துல பேச்சு நடத்துக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை 'சீட்'டுன்னு முடிவான பிறகு, தொகுதியை பைனல் பண்ணுவாங்கனு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,''

''நம்மூருக்கு வைகோ வந்திருந்தாராமே; எதுக்கு வந்தாரு,''

''எதுக்கு வருவாரு, தேர்தல் நிதி வசூலிக்கத்தான்! கூட்டணியில எவ்ளோ 'சீட்' கொடுப்பாங்கன்னே தெரியலே; அதுக்குள்ள மாவட்டம் மாவட்டமா வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாருன்னு, கட்சிக்காரங்க புலம்புறாங்க,''

''நம்ம மாவட்டத்துல ஒரு தொகுதி கொடுக்கப் போறதா கேள்விப்பட்டேனே,''

''மித்து, மொத்தம், 10 தொகுதியிருக்கு. போன எலக்சன்ல, சிங்காநல்லுார் தொகுதியில மட்டும் தி.மு.க., ஜெயிச்சது. இப்ப, கூடுதலா எத்தனை தொகுதி ஜெயிச்சாலும் தி.மு.க.,வுக்கு லாபம்தானே. அதனால, கூட்டணியில் இருக்கற ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொகுதி கொடுக்குறதுக்கு, தி.மு.க., தலைமை ரெடியா இருக்குதாம். கிணத்துக்கடவு தொகுதியை, ம.தி.மு.க., கேட்குறதா சொல்றாங்க. ''இ.கம்யூ., - வால்பாறை, மா.கம்யூ., - சிங்காநல்லுார், காங்கிரஸ்சுக்கு தொண்டாமுத்துார் தொகுதியை ஒதுக்கப் போறதா, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''

''ஸ்டாலின் வரப்போறதா சொன்னாங்களே,''

''ஆமாப்பா, வெள்ளிக்கிழமை (19ம் தேதி) வர்றாராம். மக்களிடம் குறைகேட்டு மனு வாங்கி, பெட்டியில் பூட்டி, எடுத்துட்டு போகப்போறாராம். தொண்டாமுத்துார்ல மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துனப்போ, ஒரு லேடியால பிரச்னை வந்துச்சு. நடத்தப்போற நிகழ்ச்சியில் என்ன கூத்து நடக்கப் போகுதோன்னு, கட்சிக்காரங்க பீதியில் இருக்காங்க,''

''அக்கா, பிரதமர் மோடி வரப்போற நாளைதான், பலரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. 2011ல் ஜெ., கலந்துக்கிட்ட ஆர்ப்பாட்டமே, ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமா இருந்துச்சு. அதே மாதிரி, வ.உ.சி., மைதானத்துல நிகழ்ச்சியை நடத்துறதுக்கு ஆலோசனை செய்றாங்க. வழக்கம்போல, பாதுகாப்பு காரணங்களை சொல்லி, போலீஸ்காரங்க முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்காங்க,''

''என்ன மித்து, இப்படி சொல்றே. பாதுகாப்பு கொடுக்க வேண்டியதே அவுங்கதானே; அவுங்களே பயந்தா எப்படி,'' என்ற சித்ரா, ''ரஜினி மக்கள் மன்றத்தினரை ஆளுங்கட்சிக்காரங்க இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க. முதல்வர் தலைமையில் நடந்த திருமண நிகழ்ச்சியில, சில நிர்வாகிகளை மேடையில் ஏத்தி, கட்சியில் இணைஞ்சதா அறிவிச்சிருக்காங்க,'' என்றாள்.

''அக்கா, அதே நிலைமையிலதான் தே.மு.தி.க.,காரங்களும் இருக்காங்க. 'சீட்' உடன்பாடு ஏற்படாம தனித்து போட்டின்னு சொன்னாலோ, மூன்றாவது அணி உருவாக்குனாலோ, கட்சி தாவுறதுக்கு ரெடியா இருக்காங்களாம்,'' என்றபடி, சமையலறைக்குள் சென்ற மித்ரா, இஞ்சி டீ தயாரித்து, ஒரு கோப்பையைநீட்டினாள்.

''அப்படியா,'' என்றபடி, அதை வாங்கி உறிஞ்சிய சித்ரா, ''ஆர்.எஸ்.புரம் ஸ்டேஷன்ல இருக்குற ஒரு குட்டி ஆபீஸர் சகலகலா வல்லவராம். புகார் கொடுக்க வர்றவங்களிடம், எதிர் தரப்பிடமும் தனித்தனியா பேசி, கரன்சியை கறந்திடுறாராம். எந்த தரப்பு தண்ணீராய் செலவழிக்குதோ, அவுங்களுக்கு சாதகமா செயல்படுவாராம்,''

''உயரதிகாரிகள் வரை 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு; அவுங்களாலேயும் நடவடிக்கை எடுக்க முடியலை. வேறெந்த ஸ்டேஷனுக்கு மாத்தினாலும், க்ரைம் பிரிவுக்கு போறாராம்; யாராலும் என்னை எதுவும் செய்ய முடியாதுன்னு மார்தட்டி, சவால் விடுறாராம்,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள்.

'கொரோனா' செய்தி ஒளிபரப்பாகியது. அதைக்கேட்ட மித்ரா, ''அக்கா, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டிரீட்மென்ட் எடுக்குற நோயாளிகளை, நலம் விசாரிக்க வர்றவங்கள்ட்ட செக்யூரிட்டிகள் பணம் கேட்டு, நச்சரிக்கிறாங்க. நோயாளிகளுக்கு பொருள் கொடுக்கணும்னா லஞ்சம் கொடுக்காம, பை எடுத்துட்டு போக முடியாதாம். லஞ்சம் கொடுக்காட்டி, தகராறு செய்றாங்களாம்,'' என்றபடி, 'டிவி'யில் ஒளிபரப்பான அரசியல் செய்திகளில் மூழ்கினாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X