இயற்கையை பாதுகாப்பதில் கூடுதல் விழிப்புணர்வு தேவை

Added : பிப் 16, 2021
Share
Advertisement
கடந்த, 2013ம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலம், பெரும் வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டது; அதில், 3,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானோர் காணாமல் போயினர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.தற்போது, அதே மாநிலம், சமோலி மாவட்டத்தில், நந்தாதேவி மலைச்சிகரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த, 7ம் தேதி திடீரென உடைந்ததால், பெரும் பனிச்சரிவும், அதனால், தவுலிகங்கை,

கடந்த, 2013ம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலம், பெரும் வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டது; அதில், 3,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானோர் காணாமல் போயினர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

தற்போது, அதே மாநிலம், சமோலி மாவட்டத்தில், நந்தாதேவி மலைச்சிகரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த, 7ம் தேதி திடீரென உடைந்ததால், பெரும் பனிச்சரிவும், அதனால், தவுலிகங்கை, அலெக்நந்தா நதிகளில், பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. திடீரென நிகழ்ந்த இந்த பேரிடர் சம்பவத்தில், ஏராளமானோர் சிக்கினர். இதுவரை, 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; 164 பேரை காணவில்லை என, சமோலி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த நாள் முதல் இதுவரை, மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மலைகள், காடுகள் மற்றும் நதிகள் நிறைந்த உத்தரகண்ட் மாநிலத்தில், அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இம்மாநிலத்தில், கங்கை நதியில் கலக்கும் பல சிறிய நதிகள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே, 16க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல அணைகளை கட்டி, அவற்றில், 50க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் அமைக்க, அம்மாநில அரசு தீர்மானித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. அனல் மின் நிலையங்களால், சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபடுவதால், நீர் மின் திட்டங்கள், காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கு, மத்திய - மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அதிலும், உத்தரகண்ட் மாநிலத்தில், ஏராளமான நதிகள் ஓடுவதால், அவற்றின் குறுக்கே நீர் மின் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலத்தை முக்கியமான சுற்றுலா கேந்திரமாக்க, ஏராளமான வளர்ச்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றம் என்பது, தற்போது வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மாசு அதிகரிப்பதன் வாயிலாக, புவி வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. இதனால், உலகம் முழுதும் ஆங்காங்கே வெள்ளம், வறட்சி, பருவம் தவறிய கன மழை, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு, பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகிறது.

மேலும், காடுகளை அழித்து, மனிதர்கள் வசிக்க குடியிருப்புகளை உருவாக்குவதும், பேரிடர்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், இயற்கையாக உள்ள அரண்களைமாற்றி அமைப்பதும், காடுகளை அழித்து மற்ற வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதுமே, உத்தரகண்டில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி, ஆங்காங்கே செயற்கை ஏரிகள் உருவாகலாம்; நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கலாம் என, ஏற்கனவே பல ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, இயற்றை சீற்றங்கள் அடிக்கடி நிகழும் பகுதிகளில், நீர்மின் திட்டங்கள் அமைக்கும் போது, தீவிரமான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை சூழலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாத வகையில், அணை கட்டும் பணிகளை செய்ய வேண்டும். இயற்கையை சீர்குலைக்கும் வகையிலான மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் அவசியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகளிலும், காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். காலநிலை மாற்றம், புவி வெப்பம் அதிகரித்தல் உட்பட பல விஷயங்கள் குறித்து அவ்வப்போது, சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் மாநாடுகள் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வல்லுனர்களின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என, கூறப்படுகின்றன. ஆனாலும், அவற்றை முழுமையாக அமல்படுத்துவதில்லை. இனியாவது அவற்றை செய்வது அவசியம். ஒவ்வொரு முறை இயற்கை சீற்றங்கள் நிகழும் போது, அவற்றில் இருந்து பாடம் கற்று, அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுப்பது அவசியம். அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். பனிப்பாறைகள் உருகி, சமீபத்தில் நிகழ்ந்தது போன்ற பெரிய அளவிலான உயிர் சேதங்கள், இமயமலை பகுதிகளில் அடுத்து நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்.இயற்கை சீற்றங்களால், சர்வதேச அளவில், ஆண்டுக்கு, 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, பொருளாதார இழப்பு ஏற்படுவதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மட்டும் இதனால், உள்நாட்டு உற்பத்தியில், ௦.84 சதவீதம் அளவுக்கு பாதிப்பு உண்டாவதாகவும் கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் எனில், போதிய விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம். எத்தனையோ ஆபத்துகளை, முன்னேறிய அறிவியலால், முன்னதாகவே அறிந்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், முக்கியமான சந்தர்ப்பங்களில், அவற்றை முறையாக பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை. மேலும், இயற்கை வளமிக்க விஷயங்களை அழிவிலிருந்து காப்பதும் நம் கடமை. அதுவே, மனிதன் பாதுகாப்பாக வாழ உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X