சென்னை: புதிய தொழிற்கொள்கையால் அடுத்த 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை சென்னையில் முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.,16) வெளியிட்டார். தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையையும் வெளியிட்டார். மேலும், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ரூ.28,053 கோடி முதலீட்டில் 28 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 68,775 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழில் நிறுவன உற்பத்தியையும், ரூ.3,489 கோடியில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளையும் முதல்வர் துவங்கி வைத்தார். தமிழகத்தில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டினார். திருச்சி மணப்பாறை, திருவள்ளூர் மாநல்லூர், காஞ்சிபுரம் ஒரகடம் பகுதி-2, திருமபுரி தடங்கல், புதுக்கோட்டை ஆலங்குடி, செங்கல்பட்டு ஆத்தூர் பகுதி-2, நாமக்கல் ராசாம்பாளையம், திருவண்ணாமலை பெரியகோளப்பட்டி, சேலம் பெரிய சீரகப்பாடி, உமையாள்புரம் ஆகிய 10 இடங்களில் சிப்காட் தொழில்பூங்கா அமைகிறது. மொத்தம் ரூ.33,465 கோடி மதிப்பிலான 46 திட்டங்கள் மூலம் 2,19,714 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.1,000 கோடி வழங்கப்படும்
தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை வெளியிட்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. புதிய தொழிற்கொள்கையால் அடுத்த 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சியை எட்டுவதே புதிய தொழில் கொள்கையின் நோக்கம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலீடு மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம் ரூ.1.05 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
தொழில்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு அளித்து வரும் சிட்கோ, டிட்கோ பணியாளர்களுக்கு பாராட்டுகள். சிப்காட் புத்தாக்க மையம் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும். கடந்த 6 ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2 முதலீட்டாளர் மாநாடு மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்கள் 81 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற நாடுகளில் இருந்து இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE