புதுடில்லி :முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கிலிருந்து, பத்திரிகையாளர் பிரியா ரமணியை விடுவித்த நீதிமன்றம், 'அக்பர், தவறே செய்யாத உத்தமர் என கூற முடியாது' என, அதிரடியாக கருத்து தெரிவித்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை, 'மீ டு' என்ற பெயரில், சமூக வலை தளத்தில் பகிர்ந்தனர். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும், இந்த பகிர்வுகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.
பிரபல பத்திரிகையாளராக இருந்தவர், எம்.ஜே.அக்பர். 'தி ஏஷியன் ஏஜ்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில், ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த, 2014ல், பா.ஜ.,வில் சேர்ந்த இவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், வெளியுறவு இணை அமைச்சராக பதவி வகித்தார். எம்.ஜே.அக்பர், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, பத்திரிகையாளர் பிரியா ரமணி, 'மீ டு'வில் குற்றம்சாட்டியிருந்தார்; இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு சில பெண் பத்திரிகையாளர்களும், அக்பர் மீது, பாலியல் புகார் கூறினர்.இதையடுத்து, 2018ல், அமைச்சர் பதவியை அக்பர் ராஜினாமா செய்தார். பின், டில்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில், பிரியா ரமணிக்கு எதிராக, மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
2018ம் ஆண்டில்
மீ டூ ஃபேமஸ் ஆக இருந்த நேரம்.
அப்போது,
மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த
எம்.ஜே.அக்பர் மீது
பிரபல பத்திரிகையாளர்
பிரியா ரமணி,
பாலியல் புகாரை கூறினார்.
1993ம் ஆண்டில்
தி ஏசியன் ஏஜ் பத்திரிகையின்
எடிட்டராக அக்பர் இருந்தபோது,
வேலை கேட்டு
ப்ரியா ரமணி விண்ணப்பித்தார்.
இண்டர்வியூவுக்கு
மும்பையில் உள்ள
ஓட்டல் அறைக்கு வரும்படி
பிரியாவுக்கு தகவல்
அனுப்பினார், அக்பர்.
ஓட்டலுக்கு போன
தன்னிடம் மோசமான முறையில்
அக்பர் நடந்து கொண்டதாக
ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்தார்,
பிரியா ரமணி.
பிரியாவைத் தொடர்ந்து
கிட்டத்தட்ட 20 பெண்கள் வரிசையாக
பாலியல் குற்றச்சாட்டுகளை
அக்பர் மீது அடுக்கினர்.
அதைத் தொடர்ந்து,
2018 அக்டோபர் 15ம்தேதி
டில்லி கோர்ட்டில்
பிரியா மீது
கிரிமினல் அவதூறு வழக்கை
அக்பர் தாக்கல் செய்தார்.
2 நாள் கழித்து,
மத்திய அமைச்சர் பதவியை
ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அக்பர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கிலிருந்து பிரியா ரமணியை விடுவித்து, மாஜிஸ்திரேட் ரவிந்தர குமார் பாண்டே நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் அவர் கூறியதாவது:பெண்களை தெய்வமாக வழிபடுவது தான், நம் கலாசாரம். பெண்களின் மதிப்புக்கும், கவுரவத்துக்கும், ராமாயணம், மஹாபாரதத்தில் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சீதை பற்றி, லட்சுமணனிடம் ராமன் கேட்ட போது, 'சீதையின் பாதத்தை தவிர, அவரது வேறு எந்த அங்கத்தையும் நான் பார்த்ததில்லை' என, கூறினான்.அப்படிப்பட்ட தேசத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடப்பது, பெரும் வேதனையாக உள்ளது.
மேலும், எம்.ஜே. அக்பரை, தவறுகளே செய்யாத உத்தமமான மனிதர் என, கூற முடியாது. பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை, குடும்ப கவுரவம் கருதி, வெளியில் சொல்வதில்லை. அப்படிப்பட்ட நிலையில், பெண் ஒருவர் தைரியமாக சொல்கிறார் என்றால், அதில், சந்தேகப்பட தேவையில்லை. அதனால், இந்த வழக்கிலிருந்து, பிரியா ரமணி விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு மாஜிஸ்திரேட் கூறினார்.
Advertisement