ஒரு மின் வாகனத்திற்கு வேண்டிய அடிப்படை பாகங்களை வைத்து 'சேஸி'சை மட்டும் நாங்கள் தயாரித்துத் தருகிறோம். நீங்கள் அதன் மேல், கார், வேன் என்று எந்த வண்டியையும் கட்டுவித்து விற்றுக்கொள்ளுங்கள். இப்படிச் சொல்லி அசத்துகிறது 'இஸ்ரேலின் மின் வாகன நிறுவனமான 'ஆர்.ஈ.ஈ., ஆட்டோமோட்டிவ்'.உலக மின் வாகன சந்தையில் இடம்பிடிக்கத் துடிக்கும் ஜப்பானின் டொயோட்டோவும், இந்தியாவின் மகிந்திரா குழுமமும் முந்திக்கொண்டு ஆர்.ஈ.ஈ., சேசிஸ்களை ஆர்டர் செய்துள்ளன.
பல கி.மீ., தொலைவு பயணிக்க உதவும் நவீன மின்கலன்கள், சக்கரத்தில் நேரடியாகப் பொருத்தப்பட்ட மோட்டார்கள், பிரேக்குகள், சஸ்பென்சன், டிரான்ஸ்மிசன் என்று சகல பாகங்களிலும், வாகன தயாரிப்பாளர்கள் கேட்கும் வகையில் தயாரித்துத் தருவதாக ஆர்.ஈ.ஈ., ஆட்டோமோட்டிவ் சொல்கிறது.
அடிப்படை பாகங்களை, பொருத்தி, ஒரு 'ஸ்கேட் போர்டு' வடிவில் தந்தாலும், மின் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் ஆர்.ஈ.ஈ., கவனம் செலுத்தவுள்ளது.இதற்கென பிரிட்டனில், பொறியியல் ஆராய்ச்சி மையத்தை ஆர்.ஈ.ஈ., ஆட்டோமோட்டிவ், ரூ.670.5 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
இதனால் மின் வாகன தயாரிப்பு முறையில் புதுமை பிறக்கும் என்பதோடு, மின்சார வாகன உயர் தொழில்நுட்பங்கள் ஜனநாயக மயப்படுத்தப்பட்டு விரைவில் பரவும் எனவும் வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE